விபத்து வழக்குகளில் நஷ்ட ஈடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி கோபி கோர்ட்டு உத்தரவு
கோபி கோர்ட்டு உத்தரவு
கோபி அருகே உள்ள உக்கரம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பன். கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2004-ம் ஆண்டு கோபியை அடுத்த புதுரோடு அருகே சைக்கிளில் சென்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ் கருப்பன் மீது மோதியது. இந்த விபத்தில் கருப்பன் படுகாயம் அடைந்தார்.
இதுதொடர்பான வழக்கை கோபி சார்பு நீதிமன்றம் விசாரித்து, கருப்பனுக்கு ரூ.4 லட்சத்து 71 ஆயிரத்து 982 நஷ்ட ஈடாக வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இதேபோல் கடந்த 2011-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் தேனாடு பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் கோத்தகிரி பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது பஸ் நிலையத்துக்கு வந்த அரசு பஸ் சிவக்குமார் மீது மோதியது. இந்த விபத்தில் சிவக்குமாரின் கால் துண்டானது.
இதுதொடர்பான வழக்கு கோபியில் உள்ள 3-வது மாவட்ட மற்றும் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை நீதிபதி தயாநிதி, விசாரித்து சிவக்குமாருக்கு ரூ.8 லட்சத்து 93 ஆயிரத்து 591 நஷ்ட ஈடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டார். ஆனால் இந்த வழக்கிலும் நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து கோபி பஸ் நிலையத்துக்கு சென்ற கோர்ட்டு ஊழியர்கள் அங்கிருந்த 2 அரசு பஸ்களை ஜப்தி செய்து நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர்.