வாய்க்காலின் குறுக்கே தரைப்பாலம் கட்டாததால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது

மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் வாய்க்காலின் குறுக்கே தரைப்பாலம் கட்டாததால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2022-07-10 17:52 GMT

மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் வாய்க்காலின் குறுக்கே தரைப்பாலம் கட்டாததால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முத்தப்பன் காவிரி வாய்க்கால்

மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் ஒருவர் வாய்க்கால் செல்லும் பாதையின் குறுக்கே மண்சாலை அமைத்து நகர்களை உருவாக்கி விற்பனை செய்துள்ளார். தற்போது அந்த நகரில் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 45 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த பழைய முத்தப்பன் காவிரி வாய்க்கால் கடந்த ஆண்டு பொதுப்பணித்துறை மூலம் முதல்-அமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரப்பட்டது.

தரைப்பாலம்

இந்த பணியின் போது வாய்க்காலில் சாலை அமைக்கப்பட்ட பகுதியில் தண்ணீர் செல்வதற்கு தரைப்பாலம் அமைக்காமல் தூர்வாரும் பணி நிறைவு பெற்றது. அப்போது வாய்க்காலில் தண்ணீர் செல்ல தற்காலிகமாக குழாய் அமைத்துதர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த ஆண்டு காவிரி ஆற்றிலிருந்து முத்தப்பன் காவிரி வாய்க்காலுக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர், செல்ல வழியின்றி வாய்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது.

குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்

இந்த நிலையில் இந்த ஆண்டும் வாய்காலில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் நாராயணபுரம் சாலையின் ஒருபுறத்தில் தேங்கி நிற்கிறது. அவையாம்பாள்புரத்தில் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் தற்போது அவயாம்பாள்புரத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

நடவடிக்கை

வாய்காலில் தண்ணீர் செல்ல தற்காலிகமாக குழாய் அமைத்துதர வேண்டும் என்றும், சட்டத்திற்கு புறம்பாக இடத்தை விற்பனை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரைப்பாலம் அமைத்து குடியிருப்புகளை தண்ணீர் சூழ்வதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்