மிக்ஜம் புயல்: சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் அனைத்தும் ரத்து
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் சூறைகாற்றுடன் கனமழை பெய்து வருகிறது.;
சென்னை,
வங்க கடல் பகுதியில் கடந்த 27-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது அதற்கடுத்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், தாழ்வு மண்டலமாகவும் வலுபெற்று நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டு இருந்தது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுவடைந்தது.
மிக்ஜம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சென்னையில் இருந்து 130 கிலோமீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையில் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. மிக்ஜம் புயல் தற்போது 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே நாளை மாலை கரையை கடக்க உள்ளது.
இதனிடையே, மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் நேற்று மாலை முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, வேளச்சேரி, பரங்கிமலை, எழும்பூர், மாம்பலம், மடிப்பாக்கம், பெரம்பூர், அண்ணாநகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், அரும்பாக்கம், தாம்பரம், நுங்கம்பாக்கம் உள்பட நகரின் பல பகுதிகளில் நள்ளிரவு முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், புயல், கனமழை காரணமாக சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணி வரை மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுவதாகவும், சேத விவரங்களை அறிந்த பின்னர் மின்சார ரெயிலை மீண்டும் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் ரெயில்வே அறிவித்துள்ளது.