முன்விரோதம் காரணமாக குடிசைக்கு தீ வைப்பு பொருட்கள் எரிந்து நாசம்

முன்விரோதம் காரணமாக குடிசைக்கு தீ வைக்கப்பட்டதில் பொருட்கள் எரிந்து நாசமாயின.

Update: 2023-05-05 17:53 GMT

குடியாத்தம்

முன்விரோதம் காரணமாக குடிசைக்கு தீ வைக்கப்பட்டதில் பொருட்கள் எரிந்து நாசமாயின.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை வெள்ளேரி கிராமத்தை ேசர்ந்தவர் பிரகாஷ் (வயது 50). இவரது மனைவி சின்னபொண்ணு. இவர்களது வீட்டின் அருகிலேயே சின்னபொண்ணுவின் தம்பி சிவகுமார், அவருடைய மனைவி ஜெயலட்சுமி ஆகியோர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரகாசுக்கும், சிவக்குமாருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, முன் விரோதமாக மாறியது.

சம்பவத்தன்று இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பிரகாசின் குடிசை வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் வீட்டில் இருந்து பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின.

இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் பிரகாஷ் புகார் அளித்தார். அதில், சிவகுமாரின் மனைவி ஜெயலட்சுமி தனது குடிசைக்கு தீ வைத்ததாகவும், அதனால் குடிசை மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் சிவக்குமாரின் மனைவி ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்