காஞ்சீபுரம் அருகே குடிபோதையில் மனைவியை வெட்டி கொன்ற தொழிலாளி
காஞ்சீபுரம் அருகே குடிபோதையில் மனைவியை வெட்டி கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.;
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில், கருநீலம் கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 32), கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி முனியம்மா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளது. குடி போதைக்கு அடிமையான புருஷோத்தமன் அடிக்கடி மனைவி குழந்தைகளை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முனியம்மா ஆற்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்துவிட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆற்பாக்கத்திற்கு குடித்துவிட்டு வந்த புருஷோத்தமன் மனைவி முனியம்மாவிடம் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் புருஷோத்தமன் அருகில் கிடந்த மின்வயரை எடுத்து முனியம்டாவின் கழுத்தில் சுற்றி இறுக்கி தான் வைத்திருந்த கத்தியால் சரமாறியாக வெட்டினார். இதில் முனியம்மா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓட முயன்ற புருஷோத்தமனை கிராம மக்கள் துரத்தி சென்று பிடித்தனர். பின்னர் கொலை சம்பவம் குறித்து மாகறல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த புருஷோத்தமனை கைது செய்தனர். மேலும் உயிரிழந்த முனியம்மாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மாகரல் போலீசார் புருஷோத்தமனை கைது செய்து காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.