போதையில் வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

நாகர்கோவில் அருகே வீட்டின் மாடியில் இருந்து போதையில் தவறி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-04-23 18:45 GMT

மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் அருகே வீட்டின் மாடியில் இருந்து போதையில் தவறி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.

பொக்லைன் ஆபரேட்டர்

நாகர்கோவில் அருகே ஆண்டார்குளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் நாகமணி. இவரது மனைவி தவசிமுத்து. இவர்களுக்கு நடேஷ் (வயது 34) உள்பட 3 மகன்களும், ஒரு மகளும் உண்டு. நாகமணி சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினரை விட்டு பிரிந்து சென்றார்.

இ்ந்தநிலையில் 2 மகன்களுக்கும், ஒரு மகளுக்கும் திருமணமாகி விட்டது. கடைசி மகனான நடேசுக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை. இவர் பொக்லைன் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இதனால் வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்று தங்குவது வழக்கம். இதனால் அவரது தாயார் தவசிமுத்து பக்கத்தில் உள்ள மற்றொரு மகனான சந்திரன் வீட்டில் தங்கி இருந்தார். நடேஷ் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மார்த்தாண்டம் பகுதியில் தங்கி இருந்து வேலை செய்து விட்டு நேற்று அதிகாலையில் வீட்டுக்கு வந்தார்.

பிணமாக கிடந்தார்

இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் நடேஷ் தங்கியிருந்த வீட்டின் மாடியில் இருந்து ஏதோ விழுவது ேபால் சத்தம் கேட்டது. அதே நேரத்தில் பக்கத்தில் உள்ள அண்ணன் சந்திரன் வீட்டில் மின்தடையும் ஏற்பட்டது. உடனே சத்தம் கேட்டு சந்திரன் வெளியே வந்து பார்த்தார். அப்போது நடேஷ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நடேஷ் நேற்று அதிகாலையில் 3 மணியளவில்தான் வீட்டுக்கு வந்துள்ளார்.

தவறி விழுந்தார்

பின்னர் அவர் வீட்டின் 2-வது மாடி மொட்டை மாடியில் அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது அவர் போதையில் நிலைதடுமாறி தவறி விழுந்து இறந்ததாக தெரிகிறது.

மேலும் விழும் போது பக்கத்தில் உள்ள அண்ணன் சந்திரன் வீட்டுக்கு மின்சாரம் செல்லும் சர்வீஸ் ஒயர் மீது விழுந்துள்ளார். இதில் சர்வீஸ் ஒயர் அறுந்ததால் சந்திரன் வீட்டுக்கு மின்தடை ஏற்பட்டது. மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? எனவும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்