வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி; மாடுகளுக்கு உணவாகும் முருங்கைக்காய்

வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்ததால் முருங்கை்காய் மாடுகளுக்கு உணவாகி வருகிறது.

Update: 2023-04-07 20:45 GMT

ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, மாம்பாறை, நவாமரத்துப்பட்டி, கோவிந்தாபுரம், அய்யம்பாளையம், கள்ளிமந்தையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முருங்கைக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் முருங்கைக்காய்களை விவசாயிகள் பறித்து மார்க்கம்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று, வியாபாரிகளிடம் மொத்தமாக விற்பனை செய்கின்றனர். அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் முருங்கைக்காய் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தநிலையில் தற்போது மார்க்கெட்டுகளுக்கு முருங்கைக்காய் வரத்து அதிகமாக உள்ளது. கடந்த ஒருவாரத்திற்கு முன்பு முருங்கைக்காய் வரத்து குறைவாக இருந்தது. இதனால் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.100 வரை விற்பனை ஆனது. ஆனால் தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் முருங்கைக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.8 முதல் ரூ.12 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விலை சரிந்ததால் முருங்கைக்காய்களை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து செலவுக்கு கூட வருவாய் கட்டுப்படியாவில்லை. இதனால் ஏராளமான விவசாயிகள் மரங்களிலேயே முருங்கைக்காய்களை பறிக்காமல் விட்டுள்ளனர். மேலும் சில விவசாயிகள் பறிக்கப்பட்ட முருங்கைக்காய்களை மாடுகளுக்கு உணவாக வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து கோவிந்தாபுரத்தை சேர்ந்த விவசாயி செல்வானந்தம் கூறுகையில், இப்பகுதியில் விளையும் முருங்கைகாய்கள் மிகவும் சுவையானவை. இதனால் இடையக்கோட்டை பகுதி முருங்கைக்காய் மார்க்கெட்டில் தனிமவுசு உள்ளது. ஆனால் தற்போது விலை வீழ்ச்சியால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே முருங்கைக்காயை மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றி விற்பனை செய்ய ஏதுவாக இங்கு முருங்கைக்காய் பவுடர் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்