முருங்கைக்காய் வரத்து அதிகரிப்பு; ஒரு கிலோ ரூ.30 வரை விலை குறைந்தது

திருவாரூரில் முருங்கைக்காய் வரத்து அதிகரித்துள்ளால் ஒரு கிலோ விலை ரூ.30 வரை விலை குறைந்தது.

Update: 2023-02-22 19:15 GMT

திருவாரூரில் முருங்கைக்காய் வரத்து அதிகரித்துள்ளால் ஒரு கிலோ விலை ரூ.30 வரை விலை குறைந்தது.

முருங்கைக்காய்

திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக திருச்சி, கும்பகோணம், ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படும். சமையலுக்கு பயன்படும் முக்கியமான காய்கறிகளில் முருங்கைக்காயும் ஒன்று.

முருங்கைக்காயை பயன்படுத்தி சாம்பார், வத்தக்குழம்பு, கூட்டு ஆகியவற்றை சமைக்கலாம். திருவாரூருக்கு திருச்சி, கும்பகோணம், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து முருங்கைக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முருங்கைக்காய் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருந்தது. தொடா்ந்து விலை அதிகரித்து 1 கிலோ முருங்கைக்காய் ரூ.120-க்கு விற்பனையானது.

விலை குறைந்தது

இந்த நிலையில் நேற்று திருவாரூரில் முருங்கைக்காய் விலை குறைந்து காணப்பட்டது. 1 கிலோ முருங்கைக்காய் ரூ.30 வரை குறைந்து ரூ.95-க்கு விற்பனையானது. அதேநேரத்தில் அனைத்து பருவ காலங்களிலும் வரத்து இருக்க கூடிய ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கக்கூடிய தக்காளி மற்றும் சவ்சவ், சின்ன வெங்காயம் விலை அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் ரூ.25-க்கு விற்பனையான தக்காளி நேற்று ரூ.35-க்கு விற்பனையானது. ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனையான சவ்சவ் ரூ.20-க்கு விற்பனையானது. கடந்த வாரம் வரை 4 கிலோ ரூ.100- க்கு என்று விற்பனையான சின்னவெங்காயம் நேற்று 3 கிலோ 100-க்கு விற்பனையானது.

வரத்து அதிகரிப்பு

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'முருங்கைக்காயை பொருத்தவரையில் பனிப்பொழிவு, பூச்சி தாக்குதல் உள்ளிட்டவற்றால் விளைச்சல் பாதித்தது. தற்போது விளைச்சல் அதிகரித்து, வரத்தும் அதிகரித்து உள்ளது. இதனால் ரூ.120-க்கு விற்பனையான முருங்கைக்காய் விலை குறைந்துள்ளது. அண்டை மாவட்டங்களில் இருந்து வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் ஓசூர் உள்ளிட்ட தொலைதூர பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் தக்காளி விலையும் உயர்ந்துள்ளது' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்