சேலத்தில் மாயமான மருந்து விற்பனை பிரதிநிதி ஏரியில் பிணமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருந்து விற்பனை பிரதிநிதி
சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 37). இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி கவுரி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். குருமூர்த்தி கடந்த 8-ந் தேதி மகனை பள்ளிக்கூடத்தில் விடுவதற்காக வீட்டில் இருந்து சென்றார். மகனை பள்ளியில் இறக்கி விட்ட பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து குருமூர்த்தி மாயமானது குறித்து அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் வீராணம் அருகே சேவைநகரில் உள்ள ஏரியில் குருமூர்த்தி பிணமாக மிதந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து வீராணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
கடன் தொல்லை
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று குருமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, குருமூர்த்தி வீடு கட்டுவதற்காக சிலரிடம் கடன் வாங்கி உள்ளார். அந்த கடனை அவர் கட்ட முடியாமல் மிகவும் சிரமம் அடைந்து வந்தார்.
இதற்கிடையில் கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தை திருப்பி கேட்டு வந்தனர். கடன் தொல்லையால் மனஉளைச்சலில் இருந்த குருமூர்த்தி ஏரியில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்றனர். எனினும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.