திருவண்ணாமலை காட்டுப்பகுதியில் போதை விருந்து - ரஷிய பெண் கைது

ரிஷிகேஷ், மணாலி போன்ற புனித தலங்களில் ஆன்மிக பயணம் என்ற போர்வையில் போதை விருந்து நிகழ்ச்சியை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

Update: 2024-06-13 22:15 GMT

சென்னை,

திருவண்ணாமலை காட்டுப்பகுதியில் போதை விருந்து நடத்திய ரஷிய பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

'கொக்கைன்', 'ஹெராயின்' போன்ற போதைப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வருவதை தடுக்கும் பணியில் தேசிய போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். தங்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவல்கள் அடிப்படையில் போதை கும்பல் மீது கைது நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இதற்கிடையே திருவண்ணாமலையில் உள்ள காட்டுப்பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த ஆண், பெண் தங்கியிருந்து போதைப்பொருட்களை பயன்படுத்தி வருவதாகவும், மேலும் அவர்கள் போதைப்பொருட்களுடன் விருந்து நிகழ்ச்சியை நடத்தி வருவதாகவும் தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் பெண் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் 2 பேரும் ரஷிய நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

இவர்கள் இதே போன்று ரிஷிகேஷ், மணாலி போன்ற புனித தலங்களில் ஆன்மிக பயணம் என்ற போர்வையில் போதை விருந்து நிகழ்ச்சியை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

விஷ காளான் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் பழங்குடியினர் பயன்படுத்தும் தவளை விஷம் ஆகியவற்றை போதை விருந்துக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. இந்த போதைப்பொருட்கள் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சட்டத்தால் தடை செய்யப்பட்டவை ஆகும். அவர்களிடம் இருந்து அபாயகரமான 239 கிராம் போதைப் பொருட்கள் மற்றும் விஷ காளானை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தேசிய போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவின் சென்னை மண்டல இயக்குனர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்