போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்
அரசு பள்ளிகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பந்தலூர்
சேரம்பாடி காவல்துறை சார்பில், போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. முகாமுக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் தலைமை தாங்கி பேசும்போது, போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யாராவது போதைப்பொருள் பயன்படுத்தினாலோ அல்லது விற்றாலோ போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஹெல்மெட் அணியாமலும், ஓட்டுனர் உரிமம் பெறாமலும் இருசக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது. இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றார். தொடர்ந்து பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி கொளப்பள்ளி பஜார் வரை சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) முகமது அமீன், ஆசிரியர்கள் ஸ்டார்லின், ரகுபதி, சிபானா, மலர்விழி, நிசா மற்றும் போலீசார், மாணவர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் எருமாடு அருகே பனஞ்சிறா மராடி அரசு நடுநிலை பள்ளியில் நடந்த முகாமில் மாணவர்களுக்கு கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பரிசுகளை வழங்கினார். இதில் தலைமை ஆசிரியர் அசரப் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். அய்யன்கொல்லியில் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.