கயத்தாறு அருகே புது மாப்பிள்ளை குளத்தில் மூழ்கி சாவு
கயத்தாறு அருகே புது மாப்பிள்ளை குளத்தில் மூழ்கி சாவு
கயத்தாறு:
கயத்தாறு அருகே மனைவி கண் எதிரே குளத்தில் மூழ்கி புது மாப்பிள்ளை பலியானார்.
தனியார் நிறுவன ஊழியர்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தலையால்நடந்தான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மகாராஜன் (வயது 28). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இவருக்கும், கயத்தாறு அருகே நொச்சிகுளத்தைச் சேர்ந்த சத்திய பிரபாவுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் அவர்கள் சென்னையில் வசித்தனர்.
குளத்தில் மூழ்கி...
இந்த நிலையில் தலைப்பொங்கலை கொண்டாடுவதற்காக மகாராஜன் தனது மனைவியுடன் மாமனாரின் ஊரான நொச்சிகுளத்துக்கு நேற்று வந்தார். பின்னர் மாலையில் அவர்கள் அங்குள்ள குளத்தில் குளிக்க சென்றனர். அப்போது குளத்தின் ஆழமான பகுதியில் மகாராஜன் எதிர்பாராதவிதமாக மூழ்கினார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி சத்திய பிரபா கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, மகாராஜனை காப்பாற்ற முயன்றனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் மகாராஜனை குளத்தில் இருந்து பிணமாக மீட்டனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, மகாராஜனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.