பாலக்கோடு:
மகேந்திரமங்கலம் அருகே ஏரியில் மூழ்கி பட்டதாரி வாலிபர் பலியானார். மோட்டார் சைக்கிளை கழுவ சென்றபோது நடந்த இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டதாரி வாலிபர்
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள ஜக்கமசமுத்திரம் கூட்ரோடு பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். விவசாயி. இவருடைய மகன் முருகன் (வயது 28). பி.எஸ்சி. பட்டதாரியான இவர், வீட்டில் இருந்து வந்தார். இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் முருகன், தனது மோட்டார் சைக்கிளை கழுவுவதற்காக அருகே உள்ள பொம்மனூர் ஏரிக்கு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகனின் தந்தை கோவிந்தராஜ், அக்கம் பக்கத்தில் விசாரித்தார். அப்போது முருகன் மோட்டார் சைக்கிளை கழுவ ஏரிக்கு சென்றது தெரியவந்தது.
விசாரணை
இதையடுத்து அவர் ஏரிக்கு சென்று பார்த்தபோது, முருகன் ஏரியில் தண்ணீரில் மிதந்தபடி கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கோவிந்தராஜ் கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் கோவிந்தராஜ் கதறி அழுதார்.
இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். மேலும் முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தண்ணீரில் மூழ்கி பலி
போலீசாரின் விசாரணையில், வலிப்பு நோய் காரணமாக முருகன் ஏரியில் தவறி விழுந்து, தண்ணீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மோட்டார் சைக்கிளை கழுவ சென்ற பட்டதாரி வாலிபர் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.