திருச்செங்கோடு அருகே வாய்க்காலில் தவறி விழுந்து 6-ம் வகுப்பு மாணவன் பலி-மீன் பிடிக்க சென்றபோது பரிதாபம்

திருச்செங்கோடு அருகே மீன் பிடிக்க சென்றபோது வாய்க்காலில் தவறி விழுந்து 6-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2022-08-29 17:58 GMT

எலச்சிபாளையம்:

6-ம் வகுப்பு மாணவன்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பிரிதி ஊராட்சி ஆண்டிவலசு நாயக்கர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். லாரிக்கு பெயிண்டு அடிக்கும் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருந்தனர். இதில் மூத்த மகன் குணா (வயது 12) மொளசி காட்டுவேலாம்பாளையம் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்தநிலையில் நேற்று காலை மாணவன் குணா அருகே உள்ள கிணற்றில் மீன் பிடிக்க செல்வதாக தாய் லட்சுமியிடம் கூறிவிட்டு சென்றான். பின்னர் நீண்ட நேரமாகியும் அவன் வீடு திரும்பவில்லை. இதனால் லட்சுமி அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தார்.

தண்ணீரில் மூழ்கி பலி

மேலும் அங்குள்ள பொய்யேரி பலத்த மழை காரணமாக நிரம்பி, உபரிநீர் வாய்க்கால் வழியாக வெளியேறுவதால் மாணவன் குணா தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என லட்சுமி சந்தேகம் அடைந்தார். இதனால் அவர் திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது குணா வாய்க்காலில் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவனது உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர். மாணவனின் உடலை பார்த்து தாய் லட்சுமி கதறி அழுதது உருக்கமாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மொளசி போலீசார் விரைந்து சென்று, விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

விசாரணையில், கிணற்றில் மீன் பிடிக்க செல்வதாக கூறி சென்ற குணா, ஏரி வாய்க்காலில் மீன் பிடித்ததும், அப்போது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மீன்பிடிக்க சென்ற மாணவன் வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்