'டிரோன்' மூலம் தாளடி பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி

தஞ்சை அருகே டிரோன் மூலம் தாளடி பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி நடந்தது. வேளாண்மையில் விவசாயிகள் நவீன முறையை கையாண்டு வருகிறார்கள்.

Update: 2022-12-18 20:29 GMT

தஞ்சை அருகே டிரோன் மூலம் தாளடி பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி நடந்தது. வேளாண்மையில் விவசாயிகள் நவீன முறையை கையாண்டு வருகிறார்கள்.

டிரோன் பயன்பாடு

நவீனங்களும், தொழில்நுட்பங்களும் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதில்தான் வெற்றி அடங்கி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை டிரோன்கள் பெரும்பாலும் பாதுகாப்புத் துறையை சார்ந்ததாகவே இருந்தது. தொடர்ந்து திருமணம், சினிமாத்துறை போன்றவற்றில் டிரோன் பயன்பாடு அதிகரித்தது. தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி கொள்ளும் வகையில் தற்போது பல்வேறு துறைகளிலும் டிரோன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

விவசாய பணிகள் எல்லாம் ஒரு காலத்தில் ஆட்களை வைத்து தான் நடைபெற்றது. ஆனால் இப்போது நவீன எந்திரங்களை கொண்டு நடவு, உழவு போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் பல்வேறு நவீன எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டாலும் தற்போது டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வரப்பிரசாதம்

விவசாயிகளுக்கும் இது பெரிய வரப்பிரசாதம். ஆரம்பக்காலம் என்பதால் சற்று செலவு அதிகம். இருப்பினும் வரும் காலத்தில் செலவுத் தொகை வெகுவாக குறைய ஆரம்பித்து விடும். முதலில் கையால் அறுவடை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அறுவடை முதல் நெல்லை அள்ளுவது, வைக்கோலை சுருட்டி கட்டுவது வரையில் எந்திரங்களின் பயன்பாடு வந்து விட்டது. அந்த வகையில் இனி வரும் காலங்களில் வேளாண் துறையில் டிரோன் பயன்பாடு அதிகரித்து விடும்.

டெல்டா மாவட்டங்களில் முக்கிய சாகுபடி பயிர் என்றால் அது நெல் தான். தற்போது சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக உள்ளனர். தஞ்சை மாவட்டம் ராமநாதபுரம், ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, சித்தாயல், ராயந்தூர், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், ரெட்டிப்பாளையம், பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, செங்கிப்பட்டி உட்பட பல பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மழை பெய்தது.

உரம் தெளிக்கும் பணி

பின்னர் மழை விட்டு விட்டு பெய்தது. இந்த பகுதிகளில் 30 நாட்கள் நாற்று விட்டு பறித்து நட்டு 60 நாட்களை கடந்துள்ளதால் இந்த மழை சம்பா, தாளடி பயிர்களுக்கு மிகுந்த பயன் அளித்துள்ளது என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். தற்போதைய மழை சாகுபடி பயிர்களுக்கு பயன் அளிக்கும் என்றாலும் வயல்களில் களை அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் களைக்கொல்லி மற்றும் பயிர் வளர்ச்சிக்கு உரம் தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பனிப்பொழிவும் அதிகம் இருப்பதால் இலைக்கருகல் நோய்கள் தாக்காத வகையில் உரம் தெளிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. அந்த வகையில் புதுகல்விராயன்பேட்டை பகுதியை சேர்ந்த விவசாயி இளையராஜா (வயது36) என்பவர் தனது 10 ஏக்கர் நிலத்தில் தாளடி சாகுபடி செய்துள்ளார். இதில் நவீன முறையில் பூச்சிக் கொல்லி வீணாகாமல் இருக்க டிரோன் பயன்படுத்த முடிவு செய்தார்.

விவசாயி கருத்து

அதன்படி இவரது வயலில் டிரோன் வாயிலாக பூச்சிக் கொல்லி மற்றும் குருத்துப்பூச்சி, யானைக்கொம்பு நோய் தாக்குதலை தடுக்கும் வகையில் பூச்சி மருந்துகள் தெளிக்கும் பணி நடந்தது. 1½ ஏக்கருக்கு அதிகபட்சமாக ½ மணி நேரத்தில் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது.

இது குறித்து விவசாயி இளையராஜா கூறும்போது, தற்போது மழை மற்றும் பனி என்று காலநிலை மாறுவதால் பயிர்களில் பூச்சித் தாக்குதல் ஏற்படாத வகையில் பூச்சிக் கொல்லி மருந்தை டிரோன் வாயிலாக அடிக்க முடிவு செய்தேன். மேலும் பயிர்களில் யானைக் கொம்பன் நோய் தாக்குதல் காணப்பட்டது. இதற்கும் பூச்சிமருந்து தெளிக்கப்பட்டுள்ளது. வேளாண் துறை சார்பில் இதுபோன்று டிரோன்கள் வாயிலாக பூச்சிமருந்துகள் தெளிக்க குறைந்த வாடகை வசூலித்தால் விவசாயிகள் மேலும் பயன்பெறுவார்கள். குறைந்த நேரத்தில் மருந்து தெளித்து முடித்து விடலாம். இதனால் நேரமும், பூச்சிக் கொல்லி விரயம் ஆகாமல் தடுக்கலாம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்