விருதுநகரில் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம்

விருதுநகரில் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

Update: 2022-06-13 19:39 GMT

விருதுநகர், 

விருதுநகர் நகராட்சி பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய ஆனைக்குட்டம் அணைப்பகுதி, காருசேரி கல்குவாரி, ஒண்டிப்புலி கல்குவாரி, சுக்கிரவார்பட்டி கோடைகால குடிநீர்தேக்கம் ஆகிய நிலத்தடி நீர் ஆதாரங்கள் கை கொடுத்து வந்தது. இந்தநிலையில் வல்லநாட்டிலிருந்து வரும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குடிநீரும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பயன்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆனைக்குட்டம் பகுதியில் 12 உறைகிணறுகள் உள்ள நிலையில் தற்போது 4 உறை கிணறுகளில் மட்டுமே தண்ணீர் எடுக்கப்படுகிறது. மீதி உறை கிணறுகளை சுற்றி புதர் மண்டிக் கிடக்கும் நிலையில் அதனை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்காத நிலை தொடர்கிறது. கோடை காலத்திலும் ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் இருந்து தினசரி குறைந்தபட்சம் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் வரை கிடைத்து வந்த நிலையில் தற்போது நகராட்சியின் நடவடிக்கைகளால் தினசரி 8 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது.

கல் குவாரி

ஒண்டிப்புலி கல்குவாரியை பொறுத்தமட்டில் கோடை காலத்திற்கு முன்பே அங்கிருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் தற்போதுதான் நகராட்சி நிர்வாகம் அங்கிருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே அங்கிருந்து இன்னும் தண்ணீர் வந்தபாடில்லை. காருசேரி கல் குவாரியில் இருந்து தினசரி மிக குறைந்த அளவான 4 லட்சம் லிட்டர் தண்ணீரே கிடைத்து வருகிறது. இதனால் தினசரி 50 முதல் 60 லட்சம் லிட்டர் தண்ணீர் குடிநீர் வினியோகத்திற்கு தேவைப்படும் நிலையில் தற்போது 30 லட்சம் லிட்டர் தண்ணீரே கிடைக்கும் நிலை உள்ளதால் 10 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நடவடிக்கை

எனவே நகரில் குடிநீர் பிரச்சினை மேலும் கடுமையாவதற்கு முன்பு நகராட்சி நிர்வாகம் ஆனைக்குட்டம் அணை பகுதியில் உள்ள அனைத்து உறை கிணறுகளிலிருந்தும் தண்ணீர் எடுக்கும் வகையில் அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும்.

அதேபோல ஒண்டிப்புலி குவாரியிலிருந்து குடிநீர் கொண்டு வரவும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டால் அதனை உடனடியாக கண்டறிந்து அவற்றை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Tags:    

மேலும் செய்திகள்