பள்ளத்தில் நின்று குடிநீர் பிடிக்கும் பெண்கள்

கூத்தாநல்லூர் அருகே ஆழமாக குழாய்கள் அமைக்கப்பட்டதால் பள்ளத்தில் நின்று பெண்கள் குடிநீர் பிடித்து செல்கிறார்கள். எனவே இதை அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-23 18:38 GMT

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே ஆழமாக குழாய்கள் அமைக்கப்பட்டதால் பள்ளத்தில் நின்று பெண்கள் குடிநீர் பிடித்து செல்கிறார்கள். எனவே இதை அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் குழாய்கள்

கூத்தாநல்லூர் அருகே உள்ள, குலமாணிக்கம் ஊராட்சியில் அன்னுக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அன்னுக்குடி கிராமத்தில் உள்ள கீழத்தெரு மற்றும் மேலத்தெருக்களில் உள்ள கிராம மக்களுக்கு மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.ஆனால், இந்த தெருக்களில் உள்ள மண் பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் ஆழமாக அமைக்கப்பட்டதால், குடிநீர் குழாய் மூலம் குடிநீர் மேல்பகுதி நோக்கி வருவதில்லை என கூறப்படுகிறது.இதனால், குடிநீர் குழாய் உள்ள இடங்களில் ஆழமாக பள்ளம் தோண்டி, அந்த குழிக்குள் இறங்கி குடிதண்ணீர் பிடிக்க வேண்டிய அவல நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

சேறும், சகதியுமாக..

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

"அன்னுக்குடி கீழத்தெரு மற்றும் மேலத்தெருக்களில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் வழிப்பாதை மிகவும் ஆழமாக குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதனால், வரக்கூடிய தண்ணீர் குழாய் வழியாக மேல்நோக்கி வர இயலாமல் இருந்து வருகிறது. எனவே தண்ணீர் கீழ்புறத்தில் எங்கிருந்து வருகிறதோ, அதுவரை ஆழமாக பள்ளம் தோண்டி வைத்து, அந்த பள்ளத்தில் இறங்கி தினமும் குடிநீர் பிடித்து வருகிறோம். பள்ளத்தில் இறங்கி தண்ணீர் பிடிப்பதில் மிகவும் சிரமம் உள்ளது. மேலும், பள்ளத்தில் இறங்கி பிடிக்கும் தண்ணீரில் சில நேரங்களில் சேறும், சகதியும் கலந்து விடுகிறது.

நடவடிக்கை

இதனால், தண்ணீர் அசுத்தம் அடைகிறது. எனவே குடிநீர் குழாய் பதிப்புகளை மாற்றி பொருத்தி குடிநீர் குழாயில் தண்ணீர் மேல் நோக்கி வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் குடம் மற்றும் பெரிய பாத்திரங்கள் வைத்து தண்ணீர் பிடிக்க முடியவில்லை. சிறிய அளவிலான பாத்திரங்கள் வைத்து தான் தண்ணீர் பிடிக்கிறோம். அந்த சிறிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்புவதற்கு கூட முறையான அளவில் தண்ணீர் வருவதில்லை. எனவே அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்