தமிழகத்தில் 2 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
மத்திய அரசு மூலம் தமிழகத்தில் 2 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைக்கப்பட்டது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை குறித்து திண்டுக்கல்லில் பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் கதலி நரசிங்க பெருமாள் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொரோனா காலகட்டத்தில் எந்தவித பாகுபாடும் இன்றி 220 கோடி மக்களுக்கும் 2 தவணை கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியுள்ளது. இதே காலகட்டத்தில் 80 கோடி ஏழை மக்களின் நலனுக்காக ரேஷன் கடைகளில் இலவச அரிசி, கோதுமை வழங்கப்பட்டுள்ளது. 3 கோடியே 7 லட்சம் மக்களுக்கு இலவச வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 12 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 2 கோடியே 4 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் 12 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. 'நீட்' தேர்வு மூலம் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை நனவாகி வருகிறது. இதுபோன்று மத்திய அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பா.ஜ.க. சார்பில் மாவட்டங்கள் தோறும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் வருகிற 18-ந்தேதியும், பழனியில் 22-ந்தேதியும் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. ஒடிசா ரெயில் விபத்து சம்பவத்தை தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்த விபத்தாக தான் கருத வேண்டும். சமையல் கியாஸ், பெட்ரோல் விலை விரைவில் குறைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன், மதுரை கோட்ட அமைப்பு செயலாளர் நாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி, ஊடக பிரிவு மாநில செயலாளர் ராகவன், மாவட்ட தலைவர் செந்தில் உள்பட பலர் உடன் இருந்தனர்.