மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கழுகுமலை:
கழுகுமலையில், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனம் உடைந்த வாலிபர் மதுவில் விஷம் கலந்து குடித்து பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஐ.டி.ஐ. படித்த வாலிபர்
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கிரிப்பிரகார மேலரத வீதி ஆறுமுகம் நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 55). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மாரியம்மாள் (49).
இவர்களுக்கு பேச்சிமுத்து (25), மாரிமதன் (20) ஆகிய 2 மகன்கள் உண்டு. இதில் மூத்த மகன் பேச்சிமுத்து ஐ.டி.ஐ. படித்து முடித்து விட்டு கோவையில் உள்ள ஒரு பேக்கரி கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார்.
காதல்
கழுகுமலை பகுதியில் ஒரு பெண்ணை பேச்சிமுத்து பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி பேச்சிமுத்து கழுகுமலைக்கு வந்தார். அதன்பிறகு கடந்த 2 நாட்களாக பேச்சிமுத்து யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வெளியே சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று கழுகுமலை-அத்திப்பட்டி சாலையில் அங்காள பரமேஸ்வரி கோவில் அருகே உள்ள பாலத்தின் அருகில் பேச்சிமுத்து இறந்து கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கழுகுமலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த பேச்சிமுத்துவின் அருகில் மது பாட்டில் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் கிடந்தது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு ெதரிவித்ததால் அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். பேச்சிமுத்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
--------------