தூர்வாரும் பணிகள் 31-ந் தேதிக்குள் நிறைவடையும்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் வருகிற 31-ந் தேதிக்குள் நிறைவடையும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-28 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் வருகிற 31-ந் தேதிக்குள் நிறைவடையும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி தெரிவித்துள்ளார்.

ஆய்வு

மயிலாடுதுறை நகரம் டபீர் தெருவில் நடைபெற்று வரும் தூய்மை பணிகள், சின்ன மாரியம்மன் கோவில் தெருவில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டப் பணிகள், நீதிமன்றம் எதிர்புறம் உள்ள அங்காளம்மன் குளம் மேம்படுத்தும் பணி, அகரகீரங்குடி ஹரிஜன் வாய்க்கால் தூர்வாரும் பணி, அகரகீரங்குடி ஊராட்சியில் தெற்கு தெருவில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள்.

தொடர்ந்து மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள், அரசு பெரியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் தரம் உயர்த்துவதற்காக நடைபெற்று வரும் கட்டுமான பணிகள், தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகளின் தரவுகள் பதிவேற்றம் செய்யும் பணி, பட்டா மாற்றம் தனிப்பட்டா மாற்றம் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவி பெறும் விண்ணப்பம் ஆகியவை, பொது மக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதா எனவும், மாநில வேளாண் வளர்ச்சி திட்டப் பணியினையும், மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வ சுகாதார பணியாளர்களையும், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப்பின் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கூறியதாவது:

தூர்வாரும் பணிகள்

தமிழக முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு மாதமும் அரசின் திட்டங்களை மற்றும் வளர்ச்சி பணிகளை கண்காணிக்க கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். நீர்வள ஆதார துறையின் சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.8 கோடி செலவில் 51 தூர்வாரும் பணிகள், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் ரூ.1.5 கோடி செலவில் தூர்வாரும் பணிகள், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் 1100 கி.மீ.தூரம் 460 தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அனைத்து துறைகளின் செயல்பாடுகளும் சிறந்த முறையில் செயல்படுத்தி வருகின்றன. அரசின் திட்டங்கள் முழுமையாக பயனாளிக்கு சென்றடைய வேண்டும் என்பதே அரசின் தலையாய நோக்கமாகும். நீர்வளத் துறையின் சார்பில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணி 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. வருகிற 31-ந் தேதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்றார்.

இந்த ஆய்வின்போது, கலெக்டர் மகாபாரதி, ராமலிங்கம் எம்.பி., பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபால், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் பாண்டியன், நீர்வளத்துறை உதவி பொறியாளர்கள் விஜயபாஸ்கர், வீரப்பன், வேளாண் பொறியியல் செயற்பொறியாளர் ஸ்ரீதர், ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, உதவி கலெக்டர் யுரேகா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலரவிக்குமார் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்