அதிரடியாக குறைந்த தக்காளி விலை

வரத்து அதிகரித்துள்ளதால் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் தக்காளி விலை அதிரடியாக குறைந்தது. கிலோ ரூ.20, 25-க்கு விற்பனை செய்யப்பட்டதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-08-30 18:45 GMT

திருத்துறைப்பூண்டி:

வரத்து அதிகரித்துள்ளதால் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் தக்காளி விலை அதிரடியாக குறைந்தது. கிலோ ரூ.20, 25-க்கு விற்பனை செய்யப்பட்டதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உச்சம்தொட்ட தக்காளி விலை

கடந்த சில மாதங்களாக தக்காளியின் விலை அதிகரித்து வந்தது. தங்கத்தின் விலை போன்று தக்காளியின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.120 தொடங்கி ரூ.200 வரை விற்பனையானது. தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடக பகுதியிலிருந்து வரத்து குறைந்ததால் தக்காளி விலை கடுமையான விலை ஏற்றத்தில் காணப்பட்டது.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள இல்லத்தரசிகள் சமையலுக்கு தக்காளி வாங்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு அனைத்து ரேஷன் கடைகள் , உழவர் சந்தைகளில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்தது.

விலை குறைந்தது

இருப்பினும் பொதுமக்கள் தக்காளியின் விலை கூடுதலாக இருப்பதால் அதை பயன்படுத்த முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில் தற்பொழுது தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளியின் விலை வெகுவாக குறைந்துள்ளது. அதன்படி திருத்துறைப்பூண்டி பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.20 மற்றும் ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தக்காளி வியாபாரிகள் கூறுகையில் தக்காளி விலை மிகவும் குறைந்து விட்டது. மேலும் தக்காளி ஒரு சில தினங்களில் விற்பனை செய்யவில்லை என்றால் அழுகி வீணாகிவிடும். லாபம் கிடைக்கவில்லை என்றாலும் முதல் கிடைத்தால் போதும் என்ற சூழலில் தக்காளியை மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறோம். இதில் கூடுதலான லாபங்கள் கிடைக்கவில்லை என்றாலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உள்ளது என்று தெரிவித்தனர். திருத்துறைப்பூண்டி ரெயில்வே கேட், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை பகுதிகளில் சாலை ஓரங்களில் பெட்டி பெட்டியாக தக்காளியை அடுக்கி வைத்து கிலோ ரூ.20,ரூ.25 விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்