சாலை விபத்தில் டி.ராஜேந்தரின் உறவினர் சாவு
சாலை விபத்தில் டி.ராஜேந்தரின் உறவினர் பலியானார்.
பெரம்பலூர் மேரிபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 49). இவர் பழைய பஸ் நிலையம் அருகே ஐஸ்கிரீம் பார்லரையும், தங்கும் விடுதியையும் நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி இரவு பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மயானம் அருகே ஒரு வேகத்தடுப்பில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரபாகரன் பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையிலும், அதனைத்தொடர்ந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து, அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயர்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரபாகரன் நேற்று பரிதாபமாக இறந்தார்.
மறைந்த பிரபாகரன், சினிமா நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தரின் தம்பியும், சிலம்பரசன் ரசிகர் மன்றத்தின் மாநிலத்தலைவருமான வாசுவின் நெருங்கிய உறவினர் ஆவார். இதுகுறித்து தகவல் அறிந்த வாசு நேற்று பெரம்பலூர் வந்து இறுதி மரியாதை செலுத்தினார். பிரபாகரனுக்கு மீனா என்ற மனைவியும், சிவராமகிருஷ்ணன், ஹரிகரன் என்ற இரு மகன்களும் உள்ளனர். சிவராமகிருஷ்ணன் ரஷ்யாவில் மருத்துவம் இறுதி ஆண்டும், ஹரிகரன் சமயபுரத்தில் என்ஜினீயரிங் படித்தும் வருகின்றனர்.