ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும்

ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும் என குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2023-10-26 18:45 GMT


ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும் என குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) உமாபதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகள் குறித்து எடுத்துக் கூறினர்.

அப்போது அவர்கள் பேசியதாவது:-

தரிசு நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவதற்கு நிதி வழங்குதல், மானியம் வழங்குதல் உள்ளிட்டவற்றை மாவட்ட நிர்வாகம் முறைப்படுத்த வேண்டும்.

துரித நடவடிக்கை

பருவமழை தொடங்க உள்ளதால் ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு நீர்வரத்து இருக்கும். ஏரிகளின் நீர் வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் முறையாக ஏரிகளுக்கு நீர் சென்றடையாது. எனவே நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும்.

விவசாயிகளுக்கு யூரியா உரங்களை விலை உயர்த்தப்படாமல் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகள் கடன் பெற விண்ணப்பித்தால் அவர்களின் மனு குறித்து துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் அறுவடை செய்ய உள்ளனர். பல்வேறு விளைநிலங்களில் தாழ்வாக மின் ஒயர்கள் செல்கிறது. இதனால் மின்விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மின்வாரியம் இந்த ஒயர்களை உயர்த்தி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கையேடு வெளியீடு

பின்னர் அதிகாரிகள் கூறுகையில், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். சில கோரிக்கைகள் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றனர்.

மேலும் விவசாயிகள் சிலர் தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களையும் வழங்கினர்.

தொடர்ந்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய கையேட்டினை கலெக்டர் முருகேஷ் வெளியிட்டார்.

கூட்டத்தில் கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் சோமசுந்தரம் முன்னோடி வங்கி மேலாளர் கவுரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்