நிலத்தை கொடுக்காமல் இழுத்தடிப்பு:டீக்கடைக்காரரை ஆட்டோவில் கடத்தி கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம்- 4 பேர் கைது

மதுரையில் நிலத்தை எழுதி கொடுக்காததால் டீக்கடைக்காரரை ஆட்டோவில் கடத்தி கழுத்தை அறுத்து கொன்ற கொடூர சம்பவம் நடந்து உள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-28 21:08 GMT

நாகமலைபுதுக்கோட்டை

மதுரையில் நிலத்தை எழுதி கொடுக்காததால் டீக்கடைக்காரரை ஆட்டோவில் கடத்தி கழுத்தை அறுத்து கொன்ற கொடூர சம்பவம் நடந்து உள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கழுத்தை அறுத்து கொலை

மதுரை செக்கானூரணி அருகே உள்ள நடுமுதலைக்குளத்தைச் சேர்ந்தவர் கருப்பத்தேவர். இவருடைய மகன் கருப்பையா (எ) கருப்பு (வயது 60). இவருக்கு வசந்தா என்ற மனைவியும், 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

கருப்பையா நடுமுதலைக்குளம் பஸ் நிறுத்தம் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் தனது கடையை திறக்க கருப்பையா வந்தார். அப்போது ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் வலுக்கட்டாயமாக அவரை கடத்திச் சென்றது. பின்னர் பன்னியான் கண்மாய் அருகே கருப்பையாவை கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு கொலையாளிகள் தப்பிச் சென்றனர்.

4 பேர் கைது

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த செக்கானூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகராணி, போலீசார் கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கொலையாளிகளை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் கருப்பையாவை கொலை செய்ததாக முதலைக்குளத்தைச் சேர்ந்தவரும், தற்போது மதுரை ஆரப்பாளையத்தில் வசித்து வருபவருமான தண்ணிதுரை மகன் சவுந்தரபாண்டி, கல்புளிச்சான்பட்டியைச் சேர்ந்த பாண்டி மகன் ரவிச்சந்திரன் (22), உசிலம்பட்டி தாலுகா உச்சப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் மகன் அரவிந்த்குமார் (25), இதே ஊரைச் சேர்ந்த ராஜா மகன் அருண்பாண்டி (27) ஆகியோரை கைது செய்தனர்.

நிலம் கிரையம் விவகாரம்

தலைமறைவாக உள்ள உச்சப்பட்டியைச் சேர்ந்த ரஜினிமுருகன் மகன் ஆகாஷ் (23) என்பவரை தேடி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் கொலை செய்யப்பட்ட கருப்பையா என்பவர் தனக்குச் சொந்தமான 8 சென்ட் நிலத்தை கிரையம் செய்து தருவதாக கூறி 2 ஆண்டுகளுக்கு முன்பு சவுந்தரபாண்டியிடமிருந்து ரூ.2½ லட்சம் பெற்றுக்கொண்டு நிலத்தை கிரையம் செய்து கொடுக்காமலும், பணத்தை திரும்ப கொடுக்காமலும் இழுத்தடிப்பு செய்து வந்ததால் கொலை செய்ததாக கொலையாளிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்