இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை; மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தகவல்
இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இதுவரை யாருக்கும் ஏற்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.;
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 19-ந்தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது. இதையடுத்து அறிகுறிகள் உடையவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நேற்று கூடுதலாக 3 பேர் என மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் குரங்கு காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியை ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குரங்கு காய்ச்சல் இல்லை
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவலாக உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஒமைக்ரான் வகையில் பல உட்பிரிவு தொற்று வகை உள்ளது. எனவே பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசியை உடனடியாக செலுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் இதுவரை 97 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 81 சதவீதம் பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். மேலும் 43.96 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.22 கோடி பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தாமல் உள்ளனர். இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. ஆப்பிரிக்க போன்ற நாடுகளில் மட்டும் பரவ தொடங்கிய குரங்கு காய்ச்சல், தற்போது இங்கிலாந்து, ஆஸ்திரேலிய, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பரவ தொடங்கியுள்ளது.
87 பேருக்கு டெங்கு
முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் குரங்கு காய்ச்சல் நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்பொழுது 87 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் அதிகாரிகள் மெத்தனமாக இருக்காமல், கவனமுடன் தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மாணவர்களுக்கு அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.