பெரியநெசலூரில் மாணவி ஸ்ரீமதியின் பெற்றோருக்கு டாக்டர் கிருஷ்ணசாமி ஆறுதல்
பெரியநெசலூரில் மாணவி ஸ்ரீமதியின் பெற்றோருக்கு டாக்டர் கிருஷ்ணசாமி ஆறுதல் கூறினார்.
ராமநத்தம்,
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி கடந்த 13-ந்தேதி மர்மமான முறையில் பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்தார். மாணவி சாவுக்கான காரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் பெரியநெசலூரில் உள்ள மாணவி ஸ்ரீமதியின் பெற்றோரை புதிய தமிழகம் கட்சி் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பிறகு டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், மாணவி ஸ்ரீமதியின வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுவதோடு, நேர்மையான நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்றார். இவருடன் மாநில பொது செயலாளர் அய்யர், மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெயசீலன், மாநில துணை கொள்கை பரப்பு செயலாளர் வாழையூர் குணா, கடலூர் மாவட்ட செயலாளர் அமுதன் ஆகியோர் உடனிருந்தனர்.