இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
கம்பத்தில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
கம்பத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் 85-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி கம்பம்மெட்டு சாலையில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் முருகன், கம்பம் நகர செயலாளர் அறிவழகன், தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வதித்தனர். இந்த போட்டியில் நடுமாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தட்டான் சிட்டு உள்ளிட்ட பிரிவுகளில் 120-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் மாட்டு வண்டிகளுடன் போட்டியில் கலந்து கொண்டனர்.
இந்த போட்டி கம்பம்மெட்டு சாலையில் உள்ள மண்எண்ணெய் விற்பனை நிலையம் அருகே தொடங்கி, கம்பம்மெட்டு அடிவாரம் வரை எல்லை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பந்தயத்தில் மாட்டு வண்டிகளில் பூட்டிய காளைகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை காண கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து இருந்தனர். இதில் மாட்டு வண்டியை ஓட்டுபவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர். போட்டியின்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க கம்பம் வடக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.