வீடு, வீடாக விண்ணப்ப வினியோகம் தொடங்கியது
நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்காக, வீடு, வீடாக விண்ணப்பம் வினியோகிக்கும் பணி தொடங்கி உள்ளது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்காக, வீடு, வீடாக விண்ணப்பம் வினியோகிக்கும் பணி தொடங்கி உள்ளது.
கலைஞர் உரிமைத்தொகை
நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற, முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. 2-ம் கட்ட முகாம் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது. இந்தநிலையில் நேற்று முதல் ரேஷன் கடை பணியாளர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள பெண்களுக்கு வீடு, வீடாக விண்ணப்பம் மற்றும் ஒவ்வொரு ரேஷன் கடை பகுதியில் உள்ள முகாம் நடைபெறும் நாள் போன்ற விவரம் அடங்கிய டோக்கன்களை வழங்க தொடங்கினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
பொதுமக்கள் விண்ணப்பங்களை பெற ரேஷன் கடைக்கு வர தேவையில்லை. ரேஷன் கார்டு இருக்கும் கடை பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பெற்று கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்பத்தலைவி, அதனை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு டோக்கனில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும்.
ஆதார் அட்டை
விண்ணப்ப பதிவு செய்யும் போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்க தேவையில்லை. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க வருமான சான்றிதழ், நில ஆவணங்கள் போன்ற சான்றிதழ்கள் தேவையில்லை.
விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடைபெறும். முகாம் நடைபெறும் குடியிருப்புகள், தெருக்கள், வார்டு மற்றும் அவற்றுக்கான நாட்கள் குறித்த விவரங்கள் ரேஷன் கடைகளில் தகவல் பலகையாக வைக்கப்படும். முகாமிற்கு வரும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும்.
இதுகுறித்து சந்தேகங்கள் இருப்பின் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுபாட்டு அறையை 0423-2450034, 2450035 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.