வீடு, வீடாக விண்ணப்பம் வினியோகம்

மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்துக்கு பெரியகுளம், உத்தமபாளையம் தாலுகாக்களில் வீடு, வீடாக விண்ணப்பம், டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.

Update: 2023-07-20 16:29 GMT

விண்ணப்பம், டோக்கன்

தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. தகுதி வாய்ந்த பயனாளிகள் யாரும் விடுபடக்கூடாது என்பதற்காக அனைத்து குடும்பங்களுக்கும் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட உள்ளன.

இந்த விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணி தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. வருகிற 24-ந்தேதி முதல் இதற்கான விண்ணப்ப பதிவு முகாம் தொடங்குகிறது. இதற்காக, விண்ணப்ப படிவத்துடன், விண்ணப்ப பதிவு முகாம் நடக்கும் நாள், முகாமிற்கு வர வேண்டிய நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு டோக்கனும் வழங்கப்பட்டு வருகிறது.

பெரியகுளம், உத்தமபாளையம்

தேனி மாவட்டத்தில் 2 கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறுகிறது. முதற்கட்டமாக பெரியகுளம், உத்தமபாளையம் தாலுகா பகுதிகளிலும், 2-வது கட்டமாக தேனி, போடி, ஆண்டிப்பட்டி தாலுகா பகுதிகளிலும் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடக்கிறது.

இந்தநிலையில் முதற்கட்டமாக முகாம்கள் நடக்கவுள்ள பெரியகுளம், உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன் வழங்கும் பணியில் ரேஷன் கடை பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர்.ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம் பாதிக்காத வகையில் டோக்கன் வினியோகம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு

உத்தமபாளையம் தாலுகாவை பொறுத்தவரை 172 ரேஷன்கடைகள் உள்ளன. இதில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 270 ரேஷன் கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து குடும்ப தலைவிகளுக்கு விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்களை வழங்கினர்.

அனைத்து வீடுகளிலும் முறையாக விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகிறதா? என்று உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டியன், தாசில்தார் சந்திரசேகர், துணை தாசில்தார் ஜாகீர் உசேன், வட்ட வழங்கல் அலுவலர் பாண்டி ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

கலெக்டர் ஆய்வு

பெரியகுளம் அருகே எண்டப்புளி, சில்வார்பட்டி பகுதிகளில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் வீடு, வீடாக விண்ணப்பங்கள் வினியோகம் செய்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, அனைத்து குடும்பத்தினருக்கும் வீடு தேடிச் சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன் வினியோகம் செய்ய வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர்களை அவர் அறிவுறுத்தினார்.

தேனி, போடி, ஆண்டிப்பட்டி தாலுகா பகுதிகளில் 2-வது கட்ட முகாம்கள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது. இதனால், இந்த 3 தாலுகா பகுதிகளிலும் ஆகஸ்டு 1-ந்தேதி முதல் விண்ணப்பம், டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்