இலக்கை அடையும் வரை முயற்சியை கைவிடக்கூடாது
இலக்கை அடையும் வரை முயற்சியை கைவிடக்கூடாது என்று மாணவர்களுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் அறிவுரை வழங்கியுள்ளார்.;
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் ஞானசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குனர் அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் சிவநடராஜன் வரவேற்றார். கருத்தரங்கில் கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசியதாவது:- கல்வியால் மட்டுமே மாற்றம் வரும் என்ற தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். சிறு வயதில் படிக்கும் போது எடுக்கும் முடிவுகள் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வருவதாக அமைய வேண்டும். மாணவ, மாணவிகள் செல்போனில் நேரத்தை வீணடிக்காமல் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பயன்பெற வேண்டும். பெற்றோர்கள் தங்கள் கஷ்டங்களை பிள்ளைகளுக்கு தெரியாமல் பார்த்து கொள்கிறார்கள். அதனை உணர்ந்து பிள்ளைகள நன்றாக படிக்க வேண்டும்.
புரிந்து படிக்க வேண்டும்
தினசரி நாளிதழ்களில் பொருளாதாரம், பொது அறிவு மற்றும் உலக செய்திகளை படித்து அறிவை வளர்த்து கொண்டால், போட்டி தேர்விற்கு பயனுள்ளதாக இருக்கும். பொது தேர்வில் வெற்றி பெறுவதையே குறிக்கோளாக கொண்டு மாணவ, மாணவிகள் சிந்தித்து செயல்பட வேண்டும். போட்டித் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருப்பவர்கள் படிக்கும் போது புரிந்து படிக்க வேண்டும்.
இலக்கை அடையும் வரை முயற்சியை கை விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கவேண்டும். இவ்வாறு அவர் ேபசினார். முன்னதாக தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சியை கலெக்டர் ஷ்ரவன்குமார் திறந்து வைத்து பார்வையிட்டார். கருத்தரங்கில் கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தமிழரசி, வருவாய் ஆய்வாளர் (நாகலூர்) வெங்கடேசன் மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன் நன்றி கூறினார்.