காலையில் மது குடிப்பவர்களை குடிகாரன் என்று சொல்வதா? - அமைச்சர் முத்துசாமி

மதுக் குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொல்லாதீர்கள். எனக்குக் கோபம் வரும் என அமைச்சர் முத்துசாமி கூறினார்.

Update: 2023-07-17 09:35 GMT

கோவை:

கோவை ஒண்டிப்புதூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு அமைச்சர் முத்துசாமி தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.

இதில் ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் பள்ளி மற்றும் பெண்கள் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. விழாவில் பங்கேற்ற அமைச்சர் முத்துசாமியை மாணவ, மாணவிகள், சைக்கிளுடன் வரிசையாக நின்று கொண்டு சைக்கிள் பெல் அடித்து உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் அரசின் சார்பில் சிறப்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ.260.57 கோடி மதிப்பில் 3,432 இடங்களில் பணிகள் நடக்க உள்ளது.

கோவை மாவட்டம் முழுவதும் மொத்தம் 15 ஆயிரத்து 270 வழங்கப்பட இருக்கிறது. தற்போது வரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சைக்கிள் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சைக்கிள்கள் குறித்த நேரத்திற்குள் வழங்கப்படும்.

சைக்கிள் வழங்கும்போது, மாணவர்களிடம் சைக்கிள் ஓட்ட தெரியுமா? எவ்வளவு தூரத்தில் இருந்து வருகிறார்கள் என்பதை மாணவர்களிடம் இருந்து ஆசிரியர்கள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

சைக்கிள் ஓட்ட தெரியவில்லை என்றால் அவர்களுக்கு சைக்கிள் ஓட்டி பழகுவதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்து கொடுக்க வேண்டும்.

அமலாக்கத்துறை தமிழகத்தில் ஏற்கனவே சோதனை நடத்தி இருக்கிறது. தற்போது 2-வது முறையாக அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடக்கிறது. இந்த சோதனையானது திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது.

இந்த சோதனையில் இருந்து அமைச்சர் பொன்முடி மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த அமலாக்கத்துறையின் சோதனையின் மூலம் மக்களின் கவனத்தை திசை திருப்ப பார்க்கிறார்கள்.

இதையெல்லாம் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. எங்களுடைய மக்களுக்கான பணி வழக்கம் போல நடைபெறும்.

டாஸ்மாக் விவகாரத்தை பொறுத்தவரை முதலில் தொழிலாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக பேசி அதற்கு தீர்வு காண இருக்கிறோம். ஏனென்றால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட்டால் மற்ற அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்து விட முடியும்.

டெட்ரா பேக் திட்டம், 90 எம்.எல் திட்டம் இன்னும் ஆய்வில் தான் இருக்கின்றன. அந்த திட்டங்கள் வந்தாலும் வரலாம். வராமலும் போகலாம். இந்த அரசை பொறுத்தவரை 7 மணிக்கு டாஸ்மாக் கடையை திறக்கும் எண்ணம் இல்லவே இல்லை.

குடிப்பவர்களை குடிகாரர்கள் என கூறுவதை விட்டு, அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குங்கள்.காலையில் மது குடிப்பவர்களை குடிகாரன் என்று சொன்னால் என்னால் பொறுத்துகொள்ள முடியாது

ஜாலிக்காக குடிப்பவர்களை குடிகாரர்கள் என கூறுவதில் தவறில்லை. ஆனால் கடுமையான பணிச்சூழலில் குடிப்பவர்களை குடிகாரர்கள் என கூற வேண்டாம். புதிதாக குடிக்க வருபவர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இதுபோல வயதானவர்கள், உடலுக்கு மோசமான நிலையில் இருப்பவர்கள் குடிப்பதை தடுக்கவும் அவர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் மேற்கொள்ளப்படும். ஒழுங்கான சீர்திருத்தம் என்பது யாரையும் பாதிக்காத வகையில் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்