செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட விலங்குகள் கருத்தடை சிகிச்சை கூடத்தில் நாய்கள் உயிரிழப்பு; தன்னார்வ நிறுவனம் மீது வழக்கு
செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட விலங்குகள் கருத்தடை சிகிச்சை கூடத்தில் நாய்கள் உயிரிழப்பு காரணமாக அனிமல் டிரஸ்ட் ஆப் இந்தியா தன்னார்வ நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட விலங்குகள் கருத்தடை சிகிச்சை கூடத்தில் நாய்கள் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியது. இதை தொடர்ந்து காஞ்சீபுரம் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் ஆய்வு மேற்கொன்டு முதல்கட்ட விசாரணை அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையில் அனிமல் டிரஸ்ட் ஆப் இந்தியா எனும் தன்னார்வ நிறுவனம் இந்திய விலங்குகள் நலவாரியத்தில் பதிவு செய்யாமல் இயங்கி வந்துள்ளது. செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட விலங்குகள் கருத்தடை சிகிச்சை கூடத்தில் மேற்படி தன்னார்வ நிறுவனம் நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யாமலும், விதிகளுக்கு முரணாக இயங்கி வந்துள்ளது தெரியவருகிறது. எனவே விலங்குகள் கொடுமை தடுப்பு சட்டம் 1960 பிரிவு 11 (எ) ன்படி மற்றும் இந்திய தண்டனை சட்டம் 1860 பிரிவு 428, 429 ன்படி செங்கல்பட்டு நகர போலிஸ் நிலையத்தில் மேற்படி தன்னார்வ நிறுவனத்தின் மீது முதல் தகவல் அறிக்கை பதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தன்னார்வ நிறுவனத்தின் பணிகளை செங்கல்பட்டு நகராட்சி நகர் நல அலுவலர் மேற்பார்வை செய்ய தவறியதால் அவர் மீதும், செங்கல்பட்டு நகராட்சி தூய்மை ஆய்வாளர் ஆய்வுபணி மேற்கொள்ளாததால் அவர் மீதும் விளக்கம் கேட்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காஞ்சீபுரம் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் அவர்களை விசாரணை அலுவலராக நியமனம் செய்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.