காங்கயம் பகுதியில் நோயால் செத்துப் போகும் கோழிகளை சாலையோரங்களில் போடுவதால் அவற்றை தின்னும் வளர்ப்பு நாய்கள் வெறிநாய்களாக மாறி விட்டன.
செத்த கோழிகள்
காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோழி பண்ணைகளில் தனியார் நிறுவனங்களின் பிராய்லர் கோழிகள், நாட்டுக்கோழிகள், காடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வளர்க்கப்படும் கோழிகள் நோய் தாக்குதலால் செத்துப் போனால் அவற்றை குழிகளில் போட்டு பாதுகாப்பாக மூட வேண்டும். ஆனால் பெரும்பாலான கோழிப்பண்ணை உரிமையாளர்கள் அவற்றைக் கடைப்பிடிக்காமல் செத்த கோழிகளை சாக்குகளில் போட்டுக் கட்டி சாலையோரங்கள், பி.ஏ.பி வாய்க்கால்கள், நீரோடைகள், குளங்கள், மயானங்கள் ஆகிய பகுதிகளில் வீசிச் செல்கின்றனர்.
இவ்வாறு வீசப்படும் கோழிகள் சில நாட்களில் அழுகிப் போய், அவற்றிலிருந்து புழுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுவதுடன் பெருமளவில் சுகாதார கேட்டினை ஏற்படுத்துகின்றன. மேலும் செத்த கோழிகள் கொட்டப்பட்ட இடத்திற்கு வரும் நாய்கள், அவற்றைத் தின்பதால்பல்வேறுவிதமான நோய்கள் ஏற்பட்டு நாய்களும் செத்துப் போவதும் நடக்கிறது.
வெறிநாய்கள்
மேலும் கிராமப் பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்கள், இவ்வாறு பொதுவெளியில் வீசப்பட்ட செத்த கோழிகளை தின்று பழகிவிட்டன. கோழிகள் கிடைக்காத சமயத்தில், கூட்டமாக சுற்றும் நாய்கள் ஆங்காங்கே மேய்ச்சல் நிலங்களில் மேயும் ஆடுகள், வீடுகளில் கட்டிப் போட்டிருக்கும் ஆடுகள், பட்டியில் அடைக்கப்பட்டிருக்கும் ஆடுகள், சிறிய மாட்டுக் கன்றுகள் என பிடித்து கொன்று தின்று வருகின்றன. இதனால் ஆடுகள் வளர்ப்போர் பெரும் பீதியில் உள்ளனர்.
இதுபற்றி ஆடு வளர்ப்போர் தரப்பில் கூறும்போது " கோழிகளை வழங்கும் நிறுவனங்கள், செத்த கோழிகளை முறைப்படி அப்புறப்படுத்துகிறார்களா? என்பதையும் கண்காணிக்க வேண்டும். சுகாதாரதுறையினரும் அவ்வவ்போது பண்ணைகள் உள்ள பகுதிகளில் சோதனை மேற்கொண்டு விதிகளுக்கு புறம்பாக பொது இடங்களில் செத்த கோழிகளை கொட்டும் கோழிப்பண்ணையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என்றனர்.