அதிமுக பொதுக்குழுவுக்கு புதிய இடத்தை தேர்வு செய்யும் பணி தீவிரம்- ஈசிஆரில் உள்ள விஜிபி இடத்தில் ஆய்வு
அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகிற ஜூலை 11-ந்தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளது.
சென்னை,
அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகிற ஜூலை 11-ந்தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளது. வழக்கமாக அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும். ஆனால், இந்த முறை பொதுக்குழுவை வேறு நடத்தில் அதிமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை மீனம்பாக்கம் அருகில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அதிமுக நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அந்த கல்லூரியில் சுமார் 2 ஆயிரம் கார்கள் நிறுத்தும் வசதி கொண்ட மைதானம், மிகப்பெரிய அரங்கங்கள் ஆகியவை உள்ளது. இதனால், அங்கு பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்கிடையில், கல்லூரி இடம் என்பதால் தமிழக அரசின் உயர்கல்வித்துறை அனுமதி கிடைப்பதில் சிக்கல் எழும் என செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், சென்னை ஈசிஆரில் உள்ள விஜிபி இடத்தில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு உரிய வகையில் இடம் அமைந்துள்ளதா? என அதிமுகவினர் இடத்தை பார்வையிட்டனர்.