கப்பல்துறை அதிகாரி வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை

நெல்லை அருகே கப்பல் துறை அதிகாரி வீட்டில் 45 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

Update: 2022-09-30 21:33 GMT

வடக்கன்குளம்:

நெல்லை அருகே கப்பல் துறை அதிகாரி வீட்டில் 45 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கப்பல்துறை அதிகாரி

நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள மாறன்குளத்தைச் சேர்ந்தவர் சமுத்திரபாண்டி (வயது 63). இவர் கப்பல்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி தமிழரசி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் உள்ளூரிலும், மற்றொருவர் பெங்களூருவிலும் வசித்து வருகின்றனர்.

கடந்த 27-ந்தேதி சமுத்திரபாண்டி வீட்டை பூட்டி விட்டு, தனது மனைவியுடன் பெங்களூருவில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார்.

நகைகள் கொள்ளை

நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து நைசாக உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த நகைகளை கொள்ளையடித்தனர். அதன்பிறகு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளையும் திருடிக்ெகாண்டு அங்கிருந்து சென்று உள்ளனர்.

நேற்று காலை அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் பழவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

மோட்டார் சைக்கிள் மீட்பு

அப்போது அருகில் உள்ள காட்டுப்பகுதியில், சமுத்திரபாண்டியின் வீட்டில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் கிடந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று மோட்டார் சைக்கிளை மீட்டனர். மேலும் மர்மநபர்கள் கொள்ளையடிக்க பயன்படுத்திய இரும்பு கம்பிகள் மற்றும் கையுறைகள் கிடந்ததையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

போலீசார் விசாரணையில், மர்மநபர்கள் சமுத்திரப்பாண்டியின் வீட்டில் புகுந்து நகைகளை கொள்ளையடித்து விட்டு, திருடிய மோட்டார் சைக்கிளை காட்டுப்பகுதியில் நிறுத்தி விட்டு தப்பி சென்றது தெரியவந்து உள்ளது. வீட்டில் இருந்து 45 பவுன் நகைகள் கொள்ளை போய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், சமுத்திரபாண்டி பெங்களூருவில் இருந்து வந்த பிறகே எவ்வளவு நகைகள் கொள்ளை போனது என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

கொள்ளை நடந்த வீட்டுக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி ேதடி வருகின்றனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் 45 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்