தமிழர்களின் பாரம்பரிய உடைகள் அணிவதில் ஈர்ப்பு இருக்கிறதா?

தமிழர்களின் பாரம்பரிய உடைகள் அணிவதில் ஈர்ப்பு இருக்கிறதா? என இளைய தலைமுறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-01-03 18:10 GMT

நாம் அணியும் ஆடைகளே நமக்கு அடையாளம் தருகின்றன. நமது கலாசாரத்தைச் சொல்கின்றன. தமிழர்கள் என்பதை வேட்டி, சட்டைகளே வெளிக்காட்டுகின்றன.

உலக பாரம்பரியங்களை பொக்கிஷமாக பாதுகாக்கும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட 'யுனஸ்கோ' அமைப்பு தமிழர்களின் கலாசாரம், பண்பாடு, நாகரிகத்தை நன்கு உணர்ந்து வேட்டிக்கு உலக அங்கீகாரத்தை அளித்து இருக்கிறது.

2016-ம் ஆண்டு அந்த அமைப்புதான் ஜனவரி 6-ந்தேதியை சர்வதேச வேட்டி தினமாக அறிவித்தது.

அதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் வேட்டி அணிய வேண்டும் என்ற உணர்வு இளைய தலைமுறையினரிடம் மேலோங்கி வருகிறது. அதற்காக யுனஸ்கோ அமைப்பை பாராட்ட வேண்டும்.

இதில் வேடிக்கை என்னவென்றால்? இங்கிலாந்துக்காரர் சொல்லி வேட்டி சட்டையை களைந்து விட்டு பேண்ட் சூட்டுக்கு மாறிய நாம், அமெரிக்காவில் உள்ள நிறுவனம் சொல்லித்தான் மீண்டும் வேட்டியை அணிய வேண்டியது இருக்கிறதே என்பதுதான்!

சரி போகட்டும்! எப்படியேனும் நமது பண்பாடு பாதுகாக்கப்படுவது நல்லதுதானே?

அன்றாட பணிக்கு பேண்ட்-சட்டையில் வரும் அரசு ஊழியர்கள் அன்றைய தினம் மட்டும் வேட்டி-சட்டையில் வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதே போன்று சர்வதேச வேட்டி தினத்தன்று மட்டும் கல்லூரி மாணவ-மாணவிகள் பாரம்பரிய உடைகள் அணிந்து வருவதற்கு கல்வி நிறுவனங்கள் பச்சைக்கொடி காட்டி இருக்கின்றன.

வேட்டி அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதோடு சர்வதேச வேட்டி தின கொண்டாட்டம் முடிந்து விடுகிறது. அப்புறம் அந்த வேட்டி, வீட்டு பிரோவின் ஓரத்தில் ஓய்வெடுக்கச் சென்று விடுகிறது.

எனவே சர்வதேச வேட்டி தினம் சம்பிரதாயத்திற்காக கடைப் பிடிக்கப்படுகிறதா? அல்லது இளைய தலைமுறையினரிடம் பாரம்பரிய ஆடைகள் அணிய வேண்டும் என்ற ஈர்ப்பை ஏற்படுத்துகிறதா? என்பது பற்றிய கருத்துகளை இதோ கீழே பதிவிட்டிருக்கிறார்கள் பாருங்களேன்:-

வேறுபடுத்தி பார்க்கிறார்கள்

திருவண்ணாமலையை சேர்ந்த எஸ்.சுபிதா:- வளர்ந்து வரும் நாகரீக கலாசாரத்திற்கு ஏற்ப இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பல்வேறு வடிவங்களில் ஆடைகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பொதுஇடங்களுக்கு செல்லும் போது ஆடம்பரமாக தெரிவதற்காக பல்வேறு விதங்களில் ஆடைகளை அணிகிறோம். என்னவாக இருந்தாலும் பொங்கல் பண்டிகை, கோவில் திருவிழாக்கள் போன்ற நாட்களில் இளம்பெண்கள் பாரம்பரிய உடைகளான பாவாடை தாவணி, புடவை அணிவதையே விரும்புகின்றோம். அதேபோல் இளைஞர்களும் பேண்ட், சட்டையை மறந்து விட்டு வேட்டி, சட்டைக்கு மாறிவிடுகின்றனர். பண்டிகை நாட்களில் பாரம்பரிய உடை அணிவதை மகிழ்ச்சியாக கருதுகின்றோம்.

திருப்பத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவி கீதா:-

பாரம்பரிய உடைகளை அணிவதில் எங்களுக்கும் விருப்பம் தான். ஆனால் சிறுவயதிலிருந்தே நாங்கள் இன்றைய நவநாகரிக உடைகளை அணிய பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறோம். தொடர்ந்து வளரும் போது, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சக நண்பர்கள் இன்றைய நாகரிக உடைகளை அணிந்து வரும் போது நாங்களும் அதை அணிவதை வழக்கமாக்கிக் கொண்டோம். இத்தகைய சூழலில் இன்று புதிதாக பாரம்பரிய உடைகளை அணியும்போது வேறுபடுத்தி பார்க்கப்படுகிறோம். அதாவது இன்று புடவையோ, தாவணியோ அணிந்தால் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். ஆகவே இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு நாங்கள் உடைகளை அணிந்து கொள்கிறோம். இந்த விஷயத்தில் பெற்றோர்களின் பங்களிப்பும் முக்கியமானது. அவர்கள் பாரம்பரிய உடைகளை எங்களுக்கு அணிவித்து இருந்தால் நாங்கள் அதை பழகி இருப்போம். இருப்பினும் நம் தமிழருடைய பாரம்பரிய உடைகளை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் இன்றைக்கு அவற்றை அணியக் கூடிய சூழல் அதிகமாக இல்லை. மேலும் இன்றைய நவநாகரிக உடைகள் ஒருவிதத்தில் சவுகரியமாகவும் இருப்பதால் அவற்றை விரும்புகிறோம்.

கேலி-கிண்டல்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் இ.மகேஷ்:- என்னைப் போன்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பொதுவாக டீ ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் பேண்ட், சட்டை அணிவது வழக்கம். எங்களுக்கெல்லாம் லூங்கி மற்றும் வேட்டி கட்டத் தெரியாது. வீட்டில் இருக்கும்போது சாட்ஸ் தான் அணிந்து கொண்டிருப்போம். அரசியல்வாதிகள் மற்றும் பெரியவர்கள் வேட்டி-சட்டை அணிவதை பார்க்கும் போது நாமும் அவ்வாறு அணிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அப்படி அணிந்தால் இளைஞர்கள் கேலி, கிண்டல் செய்வார்களா என்ற அச்சமும் இருந்து வந்தது. ஆனால் தற்போது தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு என்னை போன்ற இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் வேட்டி, சட்டை அணிவது மிகவும் பிரபலமாகி வருகிறது. இதனால் குடும்பத்தினர் இடையேயும், பொதுமக்கள் இடத்திலும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இதேபோல் உணவு பழக்க வழக்கங்கள் ஆகியவையும் பழைய முறையையே பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

வேலூரை அடுத்த மேட்டு இடையம்பட்டி கிராமத்தை சேர்ந்த சோபன்ராஜ்:- வேட்டி அணிவது தமிழரின் பாரம்பரியம். அது தமிழருடைய சிறப்பும் கூட. வேட்டிகள் மற்றும் பட்டு சட்டைகள் அணிவது எங்களுக்கு மிகவும் பிடிக்கும். இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் இதனையே அதிகம் விரும்புகின்றனர். நம் பாரம்பரியத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இருப்பினும் சில இளைஞர்கள் வாகனங்கள் ஓட்ட, நடந்து செல்ல வசதியாக இல்லையென வேட்டி அணிய விரும்புவதில்லை. எங்களைப் போன்ற கிராம இளைஞர்கள் வேட்டி, சட்டை அணிவதை அதிகம் விரும்புகின்றனர். நகர்புறத்தில் வசிக்கும் இளைஞர்கள் கூட இதனை பின்பற்ற வேண்டும்.

திருப்பத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவர் டி.விஷ்ணுவர்தன்:-

பாரம்பரிய உடைகள் வேட்டி சட்டை அவசியம் தேவை. ஆனால் இன்றைய சூழ்நிலைக்கு பேண்ட், சட்டை அணிவது மிக சவுகரியமாக உள்ளது. பாரம்பரிய உடைகளை பண்டிகை காலத்திலும், வீட்டு சுப நிகழ்ச்சிகளில் அணிய வேண்டும். மேலும் குடும்ப நிகழ்ச்சிகளில் ஒட்டு மொத்த குடும்பமும் பாரம்பரிய உடையை அணிய வலியுறுத்த வேண்டும். அப்பொழுதுதான் வருங்காலத்தில் பாரம்பரிய உடை அணியும் பழக்கம் ஏற்படும்.

உடல் உபாதைகள்

குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை பகுதியை சேர்ந்த நெசவுத் தொழிலாளி ஜெயந்தி:- தமிழர்களின் பாரம்பரிய உடையாக வேட்டி, சேலை இருந்தது. பண்டிகை உள்ளிட்ட காலங்களில் புதிய வேட்டி, சேலைகளை வாங்கி உடுத்துவார்கள். நாகரிகம் வளர வளர பேண்ட், சட்டை உள்ளிட்ட நாகரீக ஆடைகளுக்கு மாறினார்கள். தற்போது மீண்டும் வேட்டி சேலைகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக விழாக்களில் இளைஞர்கள், இளம்பெண்கள் வேட்டி, சேலை அணிந்து வருகின்றனர். கல்லூரி விழாக்களில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் வேட்டி, சேலைகளை அணிந்து கலந்து கொள்கின்றனர். அதனால் தற்போது வேட்டி, சேலை அணிவது மீண்டும் பிரபலமாகி வருகிறது. இளைஞர்கள் மற்றும் பெண்கள் இறுக்கமான பேண்ட் உள்ளிட்ட ஆடைகள் அணிவதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க வேட்டி, சேலை அணிவதால் உடல் ஆரோக்கியமும், நமது கலாசாரமும் மேம்படும். நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வும் மேம்படும்.

மரியாதை உண்டு

சத்துவாச்சாரியை சேர்ந்த சரவணன்:- திருமணநாள், பிறந்தநாள், பொங்கல் பண்டிகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையை விரும்பி அணியும் மனநிலை உள்ளது. ஆனால் அலுவலகம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது வேட்டி, சட்டை அணிந்து செல்வது உகந்ததாக இல்லை. வேட்டி அணிந்து வெளியே செல்லும்போது எதிர்பாராத நேரத்தில் அவிழ்ந்து விடுமோ என்று ஒருவித பயம் மனதில் ஏற்படுகிறது. பொங்கல் பண்டிகை, திருவிழா காலங்களில் இளைஞர்கள் மேற்கத்திய ஆடைகளை விட, பாரம்பரிய ஆடைகளையே விரும்பி அணிகின்றனர். அரசு அலுவலகங்கள், கல்லூரிகளில் வாரம் ஒருமுறை அனைவரும் பாரம்பரிய உடைகள் அணிந்து வர வேண்டும் என்று அரசு அறிவித்தால் நன்றாக இருக்கும். பாரம்பரிய உடைகள் மற்றும் கதர் உடைகள் அணிவதின் பயன்கள் குறித்து அரசு சார்பில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் அதிகம் பேர் பாரம்பரிய உடைகளை அணிவார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவையை சேர்ந்த பாலகிருஷ்ணன்:- பழைய காலத்தில் பாரம்பரிய உடைகளாக வேட்டி, சட்டை, மேல் தூண்டு அணிந்து கொள்வார்கள். பெரும்பாலும் கிராமத்தில் வேட்டி, சட்டை துண்டுடன் செல்பவர்களுக்கு எப்போதும் ஒரு தனி மரியாதை உண்டு. ஆனால் இப்போதுள்ள இளைஞர்கள் வேட்டி, சட்டை அணிவதில்லை. ஜீன்ஸ் பேண்ட், ஜெர்கின் போன்ற ஆடைகளை அணிந்து வருகின்றனர். பெரும்பாலும் வேட்டி, சட்டை வெள்ளை கலரில் இருக்கும். ஆனால் பேண்ட், சட்டையை அவரவர் நிறத்துக்கு ஏற்ப அணிந்து கொள்கிறார்கள். நகரத்தில் உள்ள பெண்களும் பேண்ட், டீ சர்ட் அணிந்து மகிழ்ச்சி கொள்கின்றனர். ஆனால் கிராமத்தில் உள்ள பெண்கள் பாவாடை, தாவணி அணிவதில் மகிழ்ச்சி கொள்வார்கள். ஆடைகளில் பெண்களும் ஆண்களும் வித்தியாசம் இன்றி அணிந்து கொள்கிறார்கள். பாரம்பரிய உடைகளை வாலிபர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. கிராமத்தில் உள்ள பெரியவர்கள் மட்டும் பாரம்பரிய உடையை இன்றும் அணிந்து கொண்டு மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வேட்டி வாரம்

ஜனவரி 6-ந்தேதி சர்வதேச வேட்டி தினம் என்றாலும் தமிழ்நாட்டில் ஜனவரி 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை வேட்டி வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. வேட்டி விற்பனையை அதிகரிக்க ஜவுளி நிறுவனங்கள் கவர்ச்சிகர சலுகைகளை அறிவித்து உள்ளன.

இளைஞர்கள் சிரமமின்றி அணியும் வகையில் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி, பாக்கெட் வைத்த வேட்டி என்று வேட்டியிலும் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன.

நாம் பாரம்பரிய உடைகளை தினமும் அணியாவிட்டாலும்கூட விழாக்காலங்களிலும் முடிந்தால் வாரத்தில் ஒரு தினமேனும் அணிவோம் என்றால் நெசவாளர்கள் மட்டும் அல்ல நமது கலாசாரமும் பாதுகாக்கப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

Tags:    

மேலும் செய்திகள்