தமிழர்களின் பாரம்பரிய உடைகள் அணிவதில் ஈர்ப்பு இருக்கிறதா?இளைய சமுதாயத்தினர் கருத்து

6-ந் தேதி சர்வதேச வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய உடைகள் அணிவதில் ஈர்ப்பு இருக்கிறதா? என்பது பற்றி இளைய சமுதாயத்தினர் கருத்து தெரிவித்தனர்.

Update: 2023-01-03 18:45 GMT

நாம் அணியும் ஆடைகளே நமக்கு அடையாளம் தருகின்றன. நமது கலாசாரத்தைச் சொல்கின்றன.

தமிழர்கள் என்பதை வேட்டி, சட்டைகளே வெளிக்காட்டுகின்றன.

உலக பாரம்பரியங்களை பொக்கிஷமாக பாதுகாக்கும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட 'யுனஸ்கோ' அமைப்பு தமிழர்களின் கலாசாரம், பண்பாடு, நாகரிகத்தை நன்கு உணர்ந்து வேட்டிக்கு உலக அங்கீகாரத்தை அளித்து இருக்கிறது.

2016-ம் ஆண்டு அந்த அமைப்புதான் ஜனவரி 6-ந்தேதியை சர்வதேச வேட்டி தினமாக அறிவித்தது.

பாராட்ட வேண்டும்

அதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் வேட்டி அணிய வேண்டும் என்ற உணர்வு இளைய தலைமுறையினரிடம் மேலோங்கி வருகிறது. அதற்காக யுனஸ்கோ அமைப்பை பாராட்ட வேண்டும்.

இதில் வேடிக்கை என்னவென்றால்? இங்கிலாந்துக்காரர் சொல்லி வேட்டி, சட்டையை களைந்து விட்டு பேண்ட் சூட்டுக்கு மாறிய நாம், அமெரிக்காவில் உள்ள நிறுவனம் சொல்லித்தான் மீண்டும் வேட்டியை அணிய வேண்டியது இருக்கிறதே என்பதுதான்!

சரி போகட்டும்! எப்படியேனும் நமது பண்பாடு பாதுகாக்கப்படுவது நல்லதுதானே?

கடைபிடிக்கப்படுகிறதா?

அன்றாட பணிக்கு பேண்ட்-சட்டையில் வரும் அரசு ஊழியர்கள் அன்றைய தினம் மட்டும் வேட்டி-சட்டையில் வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதே போன்று சர்வதேச வேட்டி தினத்தன்று மட்டும் கல்லூரி மாணவ-மாணவிகள் பாரம்பரிய உடைகள் அணிந்து வருவதற்கு கல்வி நிறுவனங்கள் பச்சைக்கொடி காட்டி இருக்கின்றன.

வேட்டி அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதோடு சர்வதேச வேட்டி தின கொண்டாட்டம் முடிந்து விடுகிறது. அப்புறம் அந்த வேட்டி, வீட்டு பிரோவின் ஓரத்தில் ஓய்வெடுக்கச் சென்று விடுகிறது.

எனவே, சர்வதேச வேட்டி தினம் சம்பிரதாயத்திற்காக கடைப் பிடிக்கப்படுகிறதா? அல்லது இளைய தலைமுறையினரிடம் பாரம்பரிய ஆடைகள் அணிய வேண்டும் என்ற ஈர்ப்பை ஏற்படுத்துகிறதா? என்பது பற்றிய கருத்துகளை இதோ கீழே பதிவிட்டிருக்கிறார்கள் பாருங்களேன்:-

பாரம்பரிய உடை

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ராமசாமி:-

இன்றைய நவீன காலத்தில் புதுப்புது மாடல் ஆடைகள் அணிவதுதான் வசதியாக இருக்கிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழர்களின் பாரம்பரிய உடைகளான வேட்டி அணிந்து கொண்டாடுவது சிறப்பானது ஆகும். சுப காரியங்கள் போன்ற முக்கிய விழாக்களின்போது கண்டிப்பாக பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும். தமிழர்களின் பாரம்பரிய உடைகள் அணிவதில் ஈர்ப்பு உள்ளது.

நமது பாரம்பரிய ஆடையை வாரத்தில் ஒரு நாள் அணிவதை வழக்கமாக்கி கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். பாரம்பரிய உடைகளை உயர்த்தி பிடிக்கும் வகையில் சர்வதேச வேட்டி வாரம் கடைபிடிக்கப்படுவது மகிழ்ச்சிக்குரியது.

ஆர்வம் அதிகரிப்பு

சேரன்மாதேவியை சேர்ந்த இளைஞர் டேனியல்:-

இளைஞர்கள் மத்தியில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிவதில் ஆர்வம் அதிகரித்து வருகின்றது. தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் மற்றும் கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் இளைஞர்கள் அனைவரும் ஒன்றாக வேட்டி, சட்டை அணிந்து செல்வது அழகுகூட்டுவதுடன், இளைஞர்களிடையே ஒற்றுமையையும் பலப்படுத்துகிறது.

இளைஞர்கள் பண்டிகை காலம் மட்டுமின்றி மற்ற தினங்களிலும் வேட்டி அணிந்து கைத்தறி நெசவாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

அழியும் நிலை

சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு புதூரை சேர்ந்த பட்டதாரி வேணுபிரியா:-

வேட்டி கட்டுவது என்பது நமது பாரம்பரிய முறை. ஆனால் இப்போது வேட்டி தினம் என்று கூறி பாரம்பரியத்தை ஒரு நாளாக கொண்டாடுகிறோம். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கிராமத்தில் தான். கிராமங்களில் இன்னும் முதியவர்கள் வேட்டி தான் அணிந்து செல்கிறார்கள். இளைஞர்கள் அதனை அணிவதற்கு யோசனை செய்கிறார்கள். ஏனென்றால் புதிய தொழில் நுட்பங்கள் இப்போது வந்து விட்டன. இதனால் நாம் வேட்டி அணிந்து சென்றால் நம்மை கேலி செய்வார்களோ என்று எண்ணுகிறார்கள்.

ஒரு திருமண விழாவில் இளைஞர்கள் வேட்டி அணிந்து சென்றால் அதனை பாராட்டுகிறார்கள். ஆனால், சாதாரணமாக அணிந்து செல்லும்போது என்னடா வேட்டி கட்டி கொண்டு வந்து இருக்கிறாய்? என்று கிண்டல் செய்கிறார்கள். நமது பாரம்பரிய நாகரிகம் அழியும் நிலைக்கு வந்துள்ளது. அது காப்பாற்றப்பட வேண்டும்.

அரசியல்வாதிகள் சீருடை

கடையநல்லூரைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் ஜெப சாமுவேல்:-

தமிழர்களின் அடையாளங்களில் ஒன்று வேட்டி. அந்த வேட்டி இன்று அரசியல்வாதிகளுக்கு சீருடை போல் மாறிப்போய் விட்டது. இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட் டீ-சர்ட்டுக்கு மாறிவிட்டனர்.

திருமணச் சடங்கு, கோவில் விழா போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமாவது வேட்டி அணிந்து வந்தவர்கள், இன்று திருமண வரவேற்பில், "கோட்-சூட்" அணியத்தொடங்கி விட்டனர். அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் கூட வேட்டி அணிவது இல்லை.

வாழ்வாதாரம் மேம்படும்

திசையன்விளை செல்வமருதூரை சேர்ந்த கல்லூரி மாணவர் சோமசுந்தரம்:-

வேட்டி தமிழர்களின் பாரம்பரிய உடை. தற்போதைய காலங்களில் நவீன ஆடைகள் வரவால் வேட்டி அணிவது குறைந்து வருகிறது. நமது பாரம்பரிய உடைகளை நாம் அணிய வேண்டும். இதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். வேட்டி தினத்தில் நாம் அனைவரும் வேட்டி அணிய உறுதி ஏற்போம். நெசவு தொழிலாளர்கள் வாழ்க்கையை ஒளிர செய்வோம்.

நெசவாளரின் வேதனை

கைத்தறி நெசவாளர் எஸ்.தர்மராஜ்:-

எனது குடும்பத்தில் 3-வது தலைமுறையாக இந்தத் தொழிலை நான் தாங்கி பிடித்து வருகிறேன். கைத்தறி ஆடைகள் தூய்மையான பருத்தி நூலில் நெய்யப்படுகிறது. ஒரு கைத்தறி வேட்டி நெய்வதற்கு ஒரு நாள் ஆகும். இதில் வேலைப்பாடு அதிகம். 100 பேரின் கைகளை தாண்டிதான் ஒரு கைத்தறி வேட்டி முழுமை அடைகிறது.

கைத்தறி ஆடைகள் உடலுக்கு உகந்தது. வெயில், குளிரை சூழ்நிலைக்கு ஏற்ப தாங்கி கொள்ளக் கூடியது. ஆனால் சர்வதேச வேட்டி தினத்தில் விசைத்தறி ஆடைகள்தான் அதிகம் விற்பனை ஆகின்றன. கைத்தறி ஆடைகளை யாரும் கண்டுகொள்வதில்லை. இதனால் இந்தத் தொழில் நலிவடைந்து வருகிறது. இத்தொழிலைக் காப்பாற்ற வேண்டும் என்றால் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வேட்டி, சேலைகளை கைத்தறி நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன்.

சர்வதேச வேட்டி தினத்தில் கைத்தறி ஆடைகளை வாங்கி அணிந்து எங்கள் தொழிலை ஊக்கப்படுத்துங்கள் என்று இளைய சமுதாயத்தினரை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

வேட்டி வாரம்

ஜனவரி 6-ந்தேதி சர்வதேச வேட்டி தினம் என்றாலும் தமிழ்நாட்டில் ஜனவரி 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை வேட்டி வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. வேட்டி விற்பனையை அதிகரிக்க ஜவுளி நிறுவனங்கள் கவர்ச்சிக்கர சலுகைகளை அறிவித்து உள்ளன.

இளைஞர்கள் சிரமமின்றி அணியும் வகையில் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி, பாக்கெட் வைத்த வேட்டி என்று வேட்டியிலும் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன.

நாம் பாரம்பரிய உடைகளை தினமும் அணியாவிட்டாலும்கூட விழாக்காலங்களிலும் முடிந்தால் வாரத்தில் ஒரு தினமேனும் அணிவோம் என்றால் நெசவாளர்கள் மட்டும் அல்ல நமது கலாச்சாரமும் பாதுகாக்கப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

Tags:    

மேலும் செய்திகள்