'டாஸ்மாக்', 'பார்'கள் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குள் மூடப்படுகிறதா? கண்காணிக்க அதிகாரிகளுக்கு, அமைச்சர் உத்தரவு

‘டாஸ்மாக்' மதுக்கடைகள் - ‘பார்'கள் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குள் மூடப்படுகிறதா? என்பது குறித்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2023-05-23 20:52 GMT

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் மாவட்ட அளவிலான அனைத்து கலால் துறை துணை மற்றும் உதவி கமிஷனர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அரசு முதன்மை செயலாளர் பெ.அமுதா, துறையின் கமிஷனர் எம்.மதிவாணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:-

அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குள்

தொழிற்சாலைகளால் கொள்முதல் செய்யப்படும் மெத்தனால், இயல்பு மாற்றப்பட்ட சாராவி மற்றும் தெளிந்த சாராவி ஆகியன உரிய வழிமுறையாக பெறப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

உரிய உரிமதாரர்களுக்கு மட்டுமே சாராவி மற்றும் தெளிந்த சாராவி விற்பனை செய்யப்படுகிறதா? என்பதையும், பெறப்படுகின்ற மூலப்பொருள் எதனை உற்பத்தி செய்ய வழங்கப்படுகிறதோ, அதற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறதா? மற்றும் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

மேலும் டாஸ்மாக் கடைகள், எப்.எல்.2 உரிமம் பெற்ற கிளப், எப்.எல்.3 உரிமம் பெற்ற ஓட்டல் ஆகியவற்றை கண்காணித்து விதிமுறைகள் ஏதேனும் மீறி இருப்பது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள ஆய்வு

கடலோர மாவட்டங்கள் மற்றும் மாநில எல்லை மாவட்டங்களில் தொடர்புடைய மாவட்ட கலால் அதிகாரிகள் காவல் துறையினருடன் ஒருங்கிணைந்து, காவல் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வெளிமாநில மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் ஆகியவற்றின் விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மதுபானக் கடைகள், மதுபான கூடங்கள் டாஸ்மாக் கடைகளுடன் இணைக்கப்பட்டவை, கிளப்புகள் மற்றும் ஓட்டல்களுடன் இணைக்கப்பட்ட மதுபான கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள்ளும் மூடப்படுகிறதா? என்பதை களஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

மதுவில்லா நாட்கள் மற்றும் அரசு மதுபான கடைகளை மூட உத்தரவிட்டுள்ள நாட்களில் கடைகள் மூடப்பட்டுள்ளதா? என்பதை களஆய்வு மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைக்கிணங்க, கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்துதலை தடுத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் வாரந்தோறும் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடத்த வேண்டும்.

மேலும், அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து மாவட்டத்திற்கும் பகிர்ந்து அளிக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்தும், போதை மருந்தை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்டந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நடத்த வேண்டும்.

விழிப்புணர்வு பேரணி, முகாம்கள், கருத்தரங்குகள், தெரு நாடகங்கள், சிறு நாடகங்கள், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, பொது இடங்களில் விளம்பரம் மற்றும் துண்டுப் பிரசுரம் வினியோகித்தல், மனித சங்கிலி பேரணி போன்றவற்றின் மூலம் பிரசாரம் மேற்கொள்ளுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த குழு கலந்துரையாடல், துண்டு பிரசுரம், கட்டுரைப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஆகியவை கல்லூரிகளில் நடத்தப்பட வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்