பள்ளிக்கூடம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க கூடாது கலெக்டரிடம் பூண்டி கிராம மக்கள் மனு
பள்ளிக்கூடம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என்று கலெக்டரிடம் பூண்டி கிராம மக்கள் மனு் அளித்தனா்.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அருகே பூண்டி கிராம மக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- ஸ்ரீமுஷ்ணம் அருகே குணமங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றி, எங்கள் ஊரான பூண்டி கிராமத்தில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி வளாகம், கோவில் வளாகம் அருகில் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
எங்கள் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அன்றாடம் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறோம். இங்கு டாஸ்மாக் கடை வந்தால், எங்கள் குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகும். இது தவிர மதுபிரியர்களும் குடித்து விட்டு பெண்களை கேலி, கிண்டல் செய்யும் நிலை ஏற்படும். இதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்படுவோம். பள்ளி மாணவர்களுக்கும் இடையூறாக இருக்கும்.
மதுபிரியர்களை பார்த்து மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். ஆகவே எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்ற கலெக்டர், இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.