பெற்றோர் இன்றி வரும் சிறுவர்-சிறுமிகளுக்கு விடுதியில் அறை கொடுக்க கூடாது-போலீசார் அறிவுறுத்தல்
பெற்றோர் இன்றி வரும் சிறுவர்-சிறுமிகளுக்கு விடுதியில் அறை கொடுக்க கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.;
சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி சமயபுரத்தில் விடுதி உரிமையாளர்கள் கூட்டம் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. சப்-இன்ஸ்பெக்டர் பிரியாபானு வரவேற்றார். கூட்டத்தில், முன், பின் தெரியாதவர்களை விடுதியில் தங்க அனுமதிக்கக்கூடாது. அறை எடுத்து தங்க வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் அவர்களுடைய ஆதார் கார்டு, செல்போன் எண் உள்ளிட்ட சுய விவரங்களை பதிவு செய்த பின்னரே விடுதியில் தங்க அனுமதிக்க வேண்டும். மேலும் சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 17 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் தனியாக வந்தால் அறை கொடுக்கக் கூடாது. அதேபோல் பள்ளியில் படிக்கும் சிறுவர், சிறுமிகளுக்கு அறைகளை கொடுக்கக்கூடாது. அதை மீறி கொடுத்தால் விடுதி உரிமையாளர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.