வெண்ணந்தூரில் இருந்து நாமக்கல்லுக்கு நேரடியாக பஸ்கள் இயக்கப்படுமா?
வெண்ணந்தூரில் இருந்து நாமக்கல்லுக்கு நேரடியாக பஸ்கள் இயக்கப்பட்டால் ஆயிரக்கணக்கான மக்கள் பயன் பெறுவார்கள். எனவே எப்போது பஸ்கள் இயக்கப்படும் என 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
வெண்ணந்தூர்:-
வெண்ணந்தூரில் இருந்து நாமக்கல்லுக்கு நேரடியாக பஸ்கள் இயக்கப்பட்டால் ஆயிரக்கணக்கான மக்கள் பயன் பெறுவார்கள். எனவே எப்போது பஸ்கள் இயக்கப்படும் என 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
வளர்ந்து வரும் நகரம்
சேலம் மாவட்டம் கடந்த 1997-ம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டு நாமக்கல் மாவட்டம் உதயமானது. இந்த மாவட்டம் உதயமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. நாமக்கல் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் வெண்ணந்தூரும் ஒன்று. உள்ளாட்சி அமைப்புகளில் பேரூராட்சியாகவும், ஊராட்சி ஒன்றியமாகவும் வெண்ணந்தூர் திகழ்கிறது.
இங்கு 15 வார்டுகளில் சுமார் 20 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சிக்கு பக்கத்து பேரூராட்சியாக அத்தனூர் பேரூராட்சி உள்ளது. இங்கும் 15 வார்டுகளில் சுமார் 20 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இதுதவிர 24 கிராம ஊராட்சிகளை வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றும் தன்னகத்தே கொண்டுள்ளது.
ேநரடி பஸ் வசதி இல்லை
இதுதவிர வெண்ணந்தூர் பகுதியில் உள்ள கிராம மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக வெண்ணந்தூரை சார்ந்துதான் உள்ளனர். வெளியூர் செல்ல வேண்டும் என்றாலும், மாவட்ட தலைநகரான நாமக்கல் செல்ல வேண்டும் என்றாலும் வெண்ணந்தூர் வந்துதான் செல்ல வேண்டும். அப்படி வெண்ணந்தூர் வந்தாலும் அவர்கள் நாமக்கல் செல்ல நேரடியாக பஸ் வசதி இல்லை என்பதுதான் வேதனையாக உள்ளது. இதுவரை வெண்ணந்தூர்- நாமக்கல் இடையே நேரடியாக பஸ் வசதி கிடையாது. இதுதவிர வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அளவாய்பட்டி, நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, மின்னக்கல், மதியம்பட்டி ஆகிய ஊர்களில் வசிக்கும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக தலைநகரான நாமக்கல்லுக்கு வர வேண்டி உள்ளது.
காலவிரயம்
இந்த நிலையில் வெண்ணந்தூரில் இருந்து நாமக்கல் சென்று வர 4 பஸ்கள் மாறி செல்ல வேண்டிய உள்ளது. கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் காலை 9 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டால் வீடு வந்து சேர மாலை ஆகி விடுகிறது. வெண்ணந்தூரில் இருந்து ராசிபுரம், ஆண்டகளூர் கேட், நாமக்கல் பஸ் நிலையம் செல்ல வேண்டும். அங்கிருந்துதான் கலெக்டர் அலுவலகம் செல்ல வேண்டும். இப்படித்தான் 4 பஸ்கள் மாறி செல்ல வேண்டிய உள்ளது. இதனால் பணம் செலவும், கால விரயமும், உடல்நல பாதிப்பும் ஏற்படுகிறது.
வெண்ணந்தூர் ஒன்றியத்தில் வசிப்பவர்கள் வெளியூர் சென்று இரவு ஊருக்கு வந்து சேர பஸ்வசதி இல்லை. குறிப்பாக மதுரை, திருச்சி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் போன்ற கோவில்களுக்கு செல்பவர்களின் நிலை வேதனைக்குரியதாக உள்ளது. இவர்கள் இரவு நேரத்தில் ஊர் வந்து சேர இயலாத நிலை உள்ளது. எனவே வெண்ணந்தூரில் இருந்து நாமக்கல்லுக்கு நேரடியாக பஸ் இயக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும், அதிகாரிகள் சிறிதும் செவி சாய்க்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சாத்தியம் இல்லை
அதிகாரிகள் தரப்பில் காலை 8.30 மணிக்கு எடப்பாடியில் இருந்து அரசு பஸ் வெண்ணந்தூர் வழியாக நாமக்கல் செல்கிறது. பிறகு அதேபஸ் இரவு 7.30 மணிக்கு வெண்ணந்தூர் வழியாக எடப்பாடிக்கு செல்கிறது. இதை வெண்ணந்தூர் பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்கின்றனர்.
ஆனால் இது நடைமுறையில் சாத்தியம் இல்லை. காலை முதல் இரவு வரை வெண்ணந்தூரில் இருந்து நாமக்கல்லுக்கும், நாமக்கல்லில் இருந்து வெண்ணந்தூருக்கும் பஸ்கள் இயக்க வேண்டும் என்பதுதான் வெண்ணந்தூர் பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
சேலத்துக்கு பஸ் வசதி
இதுகுறித்து விசைத்தறி அதிபர் குமார்:-சேலம் மாவட்டத்தில் இருந்து நாமக்கல் பிரிக்கப்பட்ட நிலையிலும், எங்களுக்கு சேலம் மாவட்டமே சென்று வர அதிக வசதியாக உள்ளது. ஏனென்றால் நாமக்கல்லை விட சேலம் குறைந்த தூரமாகவும், சேலம் - வெண்ணந்தூர் இடையே நேரடி பஸ் வசதியும் அதிக அளவில் இருந்து வருகிறது. அதேபோல் நாமக்கல்லுக்கும் நேரடி பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்தால், எங்களை போன்ற விசைத்தறியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகஇருக்கும்.
ஜவுளி வியாபாரி வெங்கடாசலம்:- வெண்ணந்தூரில் இருந்து சேலத்திற்கு நேரடி பஸ் வசதி உள்ளது. நாமக்கல்லுக்கு இதுவரை நேரடி பஸ்வசதி இல்லை. இதை செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதனை செய்யாமல் மாவட்டத்தை மட்டும் பிரித்து எங்களுக்கு எந்த பயனும் இல்லை. அத்தியாவசிய தேவைக்கு அரசு அலுவலகங்களுக்கு சென்று வர அதிக பண விரையமும், நேர விரையமும் தான் ஆகின்றது.
படிகளில் தொங்கி பயணம்
விவசாயி செல்லியம்மன் மணி:-
வெண்ணந்தூர் பகுதியில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கானோர் நாமக்கல்லுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களில் பணிபுரிவோர் தினசரி தலைநகரை நோக்கி சென்று வருகின்றனர். அதற்காக அதிகாலையிலேயே சுற்றுலா செல்வது போல் 4 பஸ்கள் மாறி. மாறி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எடப்பாடி பகுதியில் இருந்து காலை 9 மணிக்கு ஒரு பஸ் நாமக்கல்லை நோக்கி செல்கிறது. அதில் செல்வதற்கு இடமில்லாமல் படிகளில் தொங்கியபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. வெண்ணந்தூரிலிருந்து நாமக்கல்லுக்கு நேரடி பஸ் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தால், எங்கள் ஊரின் வளர்ச்சி மென்மேலும்அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.