தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை -எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி எச்.புதுப்பட்டியில் அ.தி.மு.க. கொடியேற்று விழா நேற்று நடந்தது. விழாவில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றிவைத்து எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை
தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு காலத்தில் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. எந்தவிதமான புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தான் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து கொண்டிருக்கிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகள் எதையும் தற்போது வரை நிறைவேற்றவில்லை. இல்லம்தோறும் குடும்ப தலைவிகளுக்கு மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை இதுவரை வழங்கப்படவில்லை. முதியோர் உதவித்தொகை ரூ.1,000-த்தில் ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும், கல்வி கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு
அனைத்திலும் முதல் இடம் என்று சொல்லி கொள்ளும் தி.மு.க. ஆட்சி லஞ்சம் பெறுவதில் மட்டும் தான் முதலிடத்தில் உள்ளது. போதை பொருள் விற்பனை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அதிகரித்துள்ளது. மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைய தீவிரமாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.