'நாடாளுமன்ற தேர்தல் பணிகளை உடனே தொடங்குங்கள்' தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளில் தி.மு.க. வெல்வது உறுதி. தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்குங்கள் என்று பொதுக்குழு கூட்டத்தில் கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் கட்டளையிட்டார்.
சென்னை,
தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட பின்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
50 ஆண்டு காலம் தி.மு.க.வை எத்தகைய சூழலிலும் வளர்த்து காத்த கருணாநிதியின் கருப்பு சிவப்புப்படையை வழிநடத்தும் பொறுப்பை நான் ஏற்றேன். அன்று முதல் நமக்கு ஏறுமுகம்தான். கிராமப்புற உள்ளாட்சித்தேர்தலில் வென்றோம். நாடாளுமன்றத்தேர்தலில் வென்றோம். சட்டமன்றத்தேர்தலில் வென்றோம். நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் வென்றோம்.
வெற்றி செய்தியை தவிர நமது காதுகள் வேறு எதையும் கேட்கவில்லை. அந்தளவுக்கு தி.மு.க.வை வெற்றிக்கோட்டையாக கட்டி வைத்துள்ளோம். இந்த 3 ஆண்டு காலம் என்பது தி.மு.க.வுக்கு முன்னேற்றமான காலம்தான் என்பதை முதல் முறை தலைவராக ஆனது முதல் இன்று வரை நிரூபித்து வருகிறோம்.
கட்சி துரோகம்
தி.மு.க.வின் 15-வது தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்துவிட்டோம். சில சலசலப்புகளை தவிர இந்த உட்கட்சித்தேர்தல் பெரும்பாலும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வர இயலாத அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள். அனைவர் ஆலோசனையையும் பெறுங்கள்.
சிலர் மற்ற நிர்வாகிகளோடு ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது இல்லை என்று சில நேரங்களில் நான் கேள்விப்படுகிறேன். இதைவிட கட்சித்துரோகம் எதுவும் இருக்க முடியாது. கிளைக்கழகம் முதல் மாவட்ட கழகம் வரை பொறுப்புக்கு வந்துள்ள உங்கள் அனைவரது செயல்பாடுகளும் தலைமைக் கழகத்தின் சார்பில் கண்காணிக்கப்படும். தலைமை கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படும் கூட்டங்களை மட்டுமே நம்முடைய அமைப்புகள் நடத்தினால் போதாது. தொடர்ச்சியாக பல்வேறு கூட்டங்களை நீங்களே நடத்துவதன் மூலமாக நீங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
இதற்கான 'மினிட்' புத்தகங்களை அறிவாலயத்தில் நானே தொடர்பு கொண்டு உங்களை கொண்டு வரச்சொல்லி பார்க்க போகிறேன். அதே போன்று அணிகளின் சார்பில் எத்தனை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள் என்பதையும் கண்காணிக்க இருக்கிறேன். இத்தகைய அணிகள் சுதந்திரமாக செயல்படுவதற்கு மாவட்ட நிர்வாகிகள் வழிவிட்டு அவர்களையும் ஊக்குவிக்க வேண்டும். மறந்துவிடக்கூடாது.
எந்தவொரு தனிமனிதரையும்விட தி.மு.க.தான் பெரிது. கொண்ட கொள்கைதான் பெரிது. இதனை எந்நாளும் நெஞ்சிலேந்தி செயல்படுங்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டிய காலம் இது. சட்டமன்ற தேர்தலில் வென்றுவிட்டோம். ஆட்சிப்பொறுப்புக்கு வந்துவிட்டோம் என்று மெத்தனமாக இருக்க முடியாது. பெற்ற வெற்றியை தக்க வைக்க வேண்டும். நிரந்தரமாக தக்க வைக்க வேண்டும். இனி தமிழ்நாட்டை தி.மு.க.தான் நிரந்தரமாக ஆளப்போகிறது என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை.
திராவிட மாடல்
'திராவிட மாடல்' என்ற சொல்லே இந்தியாவின் கவனத்தை ஈர்த்துவிட்டது. தி.மு.க.வை நோக்கி வரும் இளைஞர்களுக்கு கொள்கை பாடம் எடுப்பதும், பொதுமக்களிடம் தி.மு.க. அரசின் சாதனைகளை கொண்டு சேர்ப்பதும் அனைத்து நிர்வாகிகளின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் இது மிக முக்கியமான காலக்கட்டம். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு, புதுவைக்கு உட்பட்ட 40 தொகுதிகளையும் கைப்பற்றுவதன் மூலமாக அகில இந்திய அரசியலில் முக்கியமான சக்தியாக நாம் திகழ வேண்டும்.
எந்தவகையிலும் யாரும் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. அடுத்து நடக்க இருக்கும் சட்டமன்றத்தேர்தலிலும் 100 விழுக்காடு வெற்றியை நாம் பெற இதுதான் அடித்தளமாக அமையும் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.
நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் முகங்களில் மலர்ச்சியைப் பார்க்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 நாம்தான் உறுதியாக வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே நாடாளுமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பதை இப்போதே தொடங்குங்கள். இதற்கான நடைமுறைகள், வழிமுறைகள் தலைமைக் கழகத்தின் சார்பில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அடுத்த 2 மாதத்திற்குள் இந்த பணியை நீங்கள் முழுமையாக நாம் முடித்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.