கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. கவுன்சிலர்களை, போலீஸ் மூலம் வெளியேற்ற மேயர் உத்தரவு -மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

தொடர்ந்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. கவுன்சிலர்களை, போலீஸ் மூலம் வெளியேற்ற மேயர் உத்தரவிட்டதால் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-03 21:21 GMT


தொடர்ந்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. கவுன்சிலர்களை, போலீஸ் மூலம் வெளியேற்ற மேயர் உத்தரவிட்டதால் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தீர்மானங்கள்

மதுரை மாநகராட்சி பட்ஜெட் விவாத கூட்டம், அண்ணா மாளிகையில் நேற்று நடந்தது. மேயர் இந்திராணி தலைமை தாங்கினார். கமிஷனர் சிம்ரன் ஜீத்சிங், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியவுடன், மேயர் இந்திராணி தீர்மானங்களை வாசிக்க தொடங்கினார்.

அப்போது தி.மு.க. கவுன்சிலர் ஜெயராமன் எழுந்து நின்று, முதலில் நான் பேசுவதற்கு அனுமதி தாருங்கள் என்று கூறி கொண்டே பேச தொடங்கினார். அப்போது அவர்,தி.மு.க. மாமன்ற குழு தலைவராக என்னை நியமித்து உள்ளனர். அதேபோல் தி.மு.க. சார்பில் துணைத்தலைவர், கொறடா, செயலாளர், துணை செயலாளர், பொருளாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குழு தலைவரான எனக்கு தனி அறை ஒதுக்க வேண்டும். மற்ற மாநகராட்சிகளில் குழு தலைவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை எனக்கு வழங்க வேண்டும். இது தொடர்பாக நான் ஏற்கனவே மனு கொடுத்து இருக்கிறேன். ஆனால் நீங்கள் தி.மு.க. சார்பில் என்னை நியமித்ததற்கு சான்றிதழ் கேட்கிறீர்கள். கட்சியின் அதிகாரபூர்வ அறிவிப்புக்கு நீங்கள் எப்படி சான்றிதழ் கேட்கலாம் என்றார்.

கோஷம்

உடனே மேயர், இதுதொடர்பாக கேள்வி நேரத்தில் பேசலாம். முதலில் நீங்கள் அமருங்கள் என்றார். ஆனால் ஜெயராமன், முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள் என்றார். ஆனால் மேயர், மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசுங்கள் என்று கூறி தொடர்ந்து பேச முயன்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயராமன் உள்பட சில தி.மு.க. கவுன்சிலர்கள் மேயர் இருக்கைக்கு முன்பு வந்து கோஷம் எழுப்பினர். மேயர், அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அவர்கள் தொடர்ந்து மேயர் இருக்கைக்கு முன்பு நின்று கோஷம் எழுப்பியப்படி இருந்தனர்.

அப்போது மேயர் இந்திராணி, உங்களது கோரிக்கை தொடர்பாக என்னிடம் மனு கொடுத்து இருக்கிறீர்கள். நான் அதனை நகராட்சி நிர்வாகத்துறைக்கு அனுப்பி இருக்கிறேன். அவர்களது ஆலோசனைபடி மேல்நடவடிக்கை எடுக்கப்படும். நான் எப்போதும் கட்சி தலைவரின் (முதல்-அமைச்சர் ஸ்டாலின்) அறிவுரைப்படி தான் செயல்படுவேன். அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் நான் செயல்படுவேன். இங்கு உங்களது செயல்பாடுகளை கட்சி தலைவர் பார்த்து கொண்டு இருக்கிறார் என்பதனை உணர்ந்து செயல்படுங்கள் என்றார். ஆனால் ஜெயராமன் உள்பட சில தி.மு.க. கவுன்சிலர்கள் அங்கிருந்து நகரவில்லை. தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.

போலீசுக்கு உத்தரவு

உடனே மேயர், மக்கள் பிரச்சினைகளை இங்கு முதலில் பேசுங்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் இருக்கையில் அமருங்கள். இல்லையென்றால் வெளியேறுங்கள் என்றார். அப்போதும் ஜெயராமன் உள்பட சில தி.மு.க. கவுன்சிலர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியப்படி இருந்தனர். உடனே மேயர், சபைக்கு குந்தகம் விளைவிக்கும் கவுன்சிலர்களை வெளியேற்றுங்கள் என்று அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து மற்ற தி.மு.க. கவுன்சிலர்கள் ஜெயராமனை நோக்கி போய் இருக்கையில் அமருங்கள், பின்பு பேசி கொள்ளலாம் என்று சமரசம் செய்தனர். அதன்பின் ஜெயராமன் இருக்கையில் போய் அமர்ந்தார். அதனைத்தொடர்ந்து சபையில் விவாதம் நடந்தது.

கவுன்சிலர்களுக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் -அ.தி.மு.க. கோரிக்கை

மதுரை மாநகராட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா பேசியதாவது:-

மாமன்றத்தில் எதிர்கட்சியான அ.தி.மு.க.விற்கு அறை ஒதுக்க வேண்டும் என்று கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கேட்டு வருகிறோம். ஆனால் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. முதலில் மாமன்றத்தில் எதிர்கட்சியான எங்களை தான் பேச அழைக்க வேண்டும். கோவை மாநகராட்சியில் ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கு வார்டு மேம்பாட்டு விருப்ப நிதியாக ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து இருக்கிறார்கள். ஆனால் மாநகராட்சியில் வெறும் ரூ.10 லட்சம் தான் ஒதுக்கீடு செய்து இருக்கிறீர்கள். எனவே மதுரை மாநகராட்சியிலும் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழகத்தை மின் மிகை மாநிலம் என்று முதல்-அமைச்சர் அறிவித்து இருக்கிறார். ஆனால் மதுரை மாநகராட்சியில் நான் பேசும் போதே 2 முறை மின்தடை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

ஓட்டு போட்டவர்களுக்கு எல்லாம் ரூ.1000- கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கவுன்சிலர் ஜென்னியம்மாள் பேசும் போது, மதுரை மாநகராட்சி பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள மக்கள் திட்டங்களை வரவேற்கிறேன். பெண்களுக்கு உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவதாக முதல்-அமைச்சர் அறிவித்து இருக்கிறார். அதற்கு நன்றி தெரிவித்து மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறீர்கள். இந்த திட்டத்தில் நலிவடைந்தோருக்கு மட்டும் ரூ.1000 என்று இப்போது சொல்லி இருக்கிறார்கள். நமக்கு நலிவடைந்தோர் மட்டுமா ஓட்டு போட்டார்கள். எனவே ஓட்டு போட்ட எல்லோருக்கும் ரூ.1000 தர வேண்டும். மதுரை மாநகராட்சியில் உள்ள மத்திய அரசு கட்டிடங்களுக்கு வரிவசூல் செய்வதில்லை. இந்த வரியை வசூல் செய்தால் மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை இருக்காது. மாநகராட்சியில் உள்ள பூங்காக்களை தனியார் மூலம் பராமரிக்க வேண்டும் என்றார்.

தி.மு.க.-காங்கிரஸ் மோதல்

 மாநகராட்சி கூட்டத்தில், மேயர் இந்திராணியுடன் ஜெயராமன் உள்பட சில தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்த சமயத்தில், அ.தி.மு.க. எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா எழுந்து நின்று, ``உங்கள் கட்சி பிரச்சினையையும், சண்டையையும் வெளியே போய் வைத்துக்கொள்ளுங்கள், இது மக்கள் மன்றம். மக்கள் பிரச்சினையை பேச விடுங்கள்'' என்றார்.

இந்த கருத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் மாமன்ற தலைவர் கார்த்திகேயன் எழுந்து நின்று, மாமன்றத்தை நடத்த விடுங்கள், உங்கள் பிரச்சினையை வெளியே போய் பேசுங்கள் என்றார்.

அதனை கேட்டு ஆத்திரமடைந்த தி.மு.க. கவுன்சிலர்கள் எழுந்து நின்று, நீங்கள் மட்டும் கடந்த கூட்டத்தில் ராகுல்காந்தி கைதை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து அவரது படத்தை மாநகராட்சிக்கு எடுத்து வந்து அரசியல் செய்தீர்கள். அது என்ன மக்கள் பிரச்சினையா என பேசினர்.

இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஒருமையில் பேசி கொண்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்