இந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்;நாகர்கோவிலில் நடந்தது

இந்தி திணிப்புக்கு எதிராக நாகர்கோவில் தபால் நிலையம் முன்பு தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.

Update: 2022-10-15 20:47 GMT

நாகர்கோவில், 

இந்தி திணிப்புக்கு எதிராக நாகர்கோவில் தபால் நிலையம் முன்பு தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.

தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

இந்தி மொழி திணிப்பு மற்றும் ஒரே நுழைவு தேர்வு முறை ஆகியவற்றை எதிர்த்து தி.மு.க. இளைஞர் அணி-மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட மாணவரணி-இளைஞர் அணி சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமை தாங்கினார்.

கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவராஜ் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் ராஜரத்தினம், மாவட்ட பொருளாளர் கேட்சன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், ராஜன், புஷ்பலீலா ஆல்பன், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், பாபு, செல்வன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.ரஹ்மான், முன்னாள் மீனவர் அணி அமைப்பாளர் நசரேத் பசலியான், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் இ.என்.சங்கர், மேற்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் பிஸ்வஜித் ஆல்பன், மாநகராட்சி மண்டல தலைவர் ஜவகர், முன்சிறை ஒன்றிய துணை செயலாளர் அம்சி நடராஜன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கண்டன கோஷம்

ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மேயர் மகேஷ் பேசியதாவது:-

இந்தி மொழியை கொண்டு வந்து பிற மொழிகளை மத்திய அரசு அழிக்க முயற்சிக்கிறது. தமிழகத்தில் ஒருபோதும் இந்தியை திணிக்க விடமாட்டோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். கன்னியாகுமரி தொகுதியில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பா.ஜனதா கட்சியை வீழ்த்த வேண்டும் என்பது நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் கடுக்கரை பகுதியை சேர்ந்த சுடலைதாஸ் (வயது 75) என்பவர் பங்கேற்றார். அவர் கண்டன கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்