கோவில் வழிகாட்டி பலகை மீது தி.மு.க. போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு
தக்கலை அருகே கோவில் வழிகாட்டி பலகை மீது தி.மு.க. போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு
தக்கலை,
தக்கலை அருகே உள்ள வாழ்வச்சகோஷ்டம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில் உள்ளது. இந்தகோவிலுக்கு செல்வதற்காக புலிப்பனத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டி பலகை மீது நேற்று முன்தினம் இரவில் தி.மு.க.வினர் வாழ்த்து போஸ்டரை ஒட்டி சென்றுள்ளனர்.
நேற்று காலையில் இதை கண்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும், இந்து அமைப்பினரும் அங்கு திரண்டனர். இதுகுறித்து தகவலை அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது போஸ்டரை ஒட்டியவர்களே கிழித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கூறினர். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளை போலீசார் அழைத்து அவர் மூலம் வழிகாட்டி பலகை மீது ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்து அகற்றினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.