மகளிர் இடஒதுக்கீடு குறித்து பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை -அண்ணாமலை பேட்டி

மகளிர் இடஒதுக்கீடு குறித்து பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை என்று அண்ணாமலை தெரிவித்தார்.

Update: 2023-10-15 20:39 GMT

கோவை,

தமிழகம் முழுவதும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் அவர் இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் தனது நடைபயணத்தை தொடங்க உள்ளார்.நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவினாசியில் காலையிலும், மேட்டுப்பாளையத்தில் மாலையிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடை பயணத்தில் மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல், எல்.முருகன் பங்கேற்க உள்ளனர்.

இதற்காக அண்ணாமலை நேற்று காலை விமானம் மூலம் கோவை சென்றார். கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

தி.மு.க. சார்பில் நேற்று (நேற்று முன்தினம்) சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நடத்தி உள்ளனர். அதில் மகளிர் உரிமை குறித்து பேசி உள்ளனர். யாரும் செய்யத்துணியாததை பிரதமர் மோடி செய்துள்ளார். எந்தவித பின்னணியும் இல்லாமல் மகளிருக்காக இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளார்.

தி.மு.க.வுக்கு தகுதி இல்லை

கடந்த 31-12-2022-ல் நடத்தப்பட்ட மகளிர் மாநாட்டில் பெண் போலீஸ் ஏட்டு ஒருவரிடம் தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் தவறாக நடந்துகொண்டனா். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த போலீஸ் நிலையத்துக்கு தி.மு.க. பகுதி செயலாளர் சென்று பெண் ஏட்டுவை வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என்று சொல்லி உள்ளார்.

அதன்பிறகு எம்.எல்.ஏ. ஒருவர் போலீஸ் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு அந்த பெண் போலீஸ் ஏட்டுவை சமாதானமாக போகுமாறு கூறியுள்ளார். இதுதான் இவர்கள் மகளிரை காக்கும் நிலையா? இப்படி பெண் போலீசையே மிரட்டும் தி.மு.க.வுக்கு மகளிர் இடஒதுக்கீடு பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை.

தி.மு.க.வை வளர்க்கும் காங்கிரஸ்

அரசியலுக்கு முதல் தலைமுறை பெண்கள் வர வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது. தமிழகத்தில் அப்படிப்பட்ட காலம் வரும். காங்கிரஸ் கட்சி தனது கட்சியை வளர்ப்பதை விட தி.மு.க.வை வளர்ப்பதில் தான் அதிக குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியை கேள்வி கேட்பது எங்களின் கடமை. அதற்கு அவர்கள் பதில் அளிக்க வேண்டும்.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியின் போது நடந்த சம்பவத்தை எடுத்துக்கூறி விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார். அப்படி என்றால் அவர் தர்மத்தை தர்மமாக பார்க்க வேண்டியது தானே. அதை விடுத்து ஏன் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தெரிவித்தார்.

வீழ்த்த முடியாது

தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையை தேசிய தலைவர்கள் தான் மேற்கொள்வார்கள். எனது ஒரே வேலை தமிழகத்தில் பா.ஜ.கவை வளர்ப்பது மட்டுமே. அதனை நோக்கி நான் பயணித்து கொண்டிருக்கிறேன். இந்தியா கூட்டணி முழுவதும் ஒன்று சேர்ந்தாலும் வருகிற 5 மாநில தேர்தல்களில் பா.ஜ.க.வை அவர்களால் வீழ்த்த முடியாது. இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிப்பதற்கு கவர்னர் கையெழுத்து போட மாட்டார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ள 'பீக்ஹவர்ஸ்' மின் கட்டணத்தால் கோவையில் உள்ள தொழில்துறையினர் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். தொழிற்சாலைகளை குழியில் போட்டு மூடும் வேலையை தமிழக அரசு பார்த்து வருகிறது. தமிழக சட்டசபையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேசும்போது மைக் நிறுத்தப்பட்டுள்ளது. சட்டசபை சபாநாயகர் தங்களை சுய பரிசோதனை செய்து கொண்டு அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்