தி.மு.க. ஆட்சியில் இளைஞர்களுக்கு வழங்கிய வேலை குறித்து வெள்ளை அறிக்கை - ஆர்.பி.உதயகுமார் பேச்சு
தி.மு.க. ஆட்சியில் இளைஞர்களுக்கு வழங்கிய வேலைவாய்ப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
தி.மு.க. ஆட்சியில் இளைஞர்களுக்கு வழங்கிய வேலைவாய்ப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
பூத் கமிட்டி கூட்டம்
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், மேற்கு, தெற்கு ஒன்றியம் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி கூட்டம் பொதும்பு, அதலை, அரியூர் ஆகிய பகுதியில் நடந்தது. ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசன், சரவணன், மாணிக்கம், கருப்பையா, மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட பொருளாளர் திருப்பதி, ஒன்றிய செயலாளர் ராமையா உள்பட பலர் கலந்து கொண்டனர். பூத் கமிட்டியை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். இருந்த போது 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர்.அதனை ஜெயலலிதா ஒன்றரை கோடி தொண்டர்களாக உருவாக்கி கொடுத்தார். தற்போது எடப்பாடி பழனிசாமி, 2 கோடியே 84 ஆயிரம் தொண்டர்களுடன் மாபெரும் இயக்கமாக உருவாக்கி உள்ளார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கணினி திட்டம், கிராமப்புறங்களில் கறவை மாடு, ஆடுகள் திட்டம், பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம், 1000 இடங்களில் அம்மா மினி கிளினிக், குடிமராமத்து திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது.
8 கோடி பேர் கையெழுத்து
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். இப்போது நீட் தேர்வை ரத்து செய்ய ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்குவோம். அதற்கு அ.தி.மு.க. கையெழுத்து போடுமா என கேட்கிறார். நாங்கள் தேர்தல் வாக்குறுதிகள் கூறிய நீட் தேர்வு ரத்து செய்வதில் தோல்வியடைந்து விட்டோம் என்று உதயநிதி ஒப்புகொள்ள வேண்டும். எடப்பாடி பழனிசாமி, 8 கோடி மக்களிடம் கையெழுத்து வாங்கி தருவார். ஆனால் நீட் தேர்வை ரத்து செய்ய ஜனாதிபதி கையெழுத்து வேண்டும் என்பது கூட தெரியாமல் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார்.
இந்த 2½ ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பொருளாதாரம் மந்தநிலை, மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஆளுங்கட்சியின் அராஜகம், தற்போது 2-ம் முறையாக மின் கட்டண உயர்வு, பீக் ஹவர் கட்டணம், சோலார் தகடுகள் அதன் மூலம் உபயோகிக்கும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் என அரசின் நடவடிக்கையால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேர் வீதம் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை யாருக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவில்லை. எனவே தி.மு.க.ஆட்சியில் இளைஞர்களுக்கு வழங்கிய வேலைவாய்ப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.