உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம்தி.மு.க. கவுன்சிலருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக தி.மு.க. கவுன்சிலருக்கு சரமாரி அரிவாள்வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக பா.ம.க. பிரமுகர் உள்பட சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-07-15 18:45 GMT


கண்டமங்கலம், 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் பெரியபாபுசமுத்திரம் வார்டு தி.மு.க. ஒன்றிய கவுன்சிலராக இருப்பவர் சரவணன். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பா.ம.க. பிரமுகர் பிரகாசுக்கும் இடையே உள்ளாட்சி தேர்தல் மற்றும் தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

நேற்று முன்தினம் பெரியபாபுசமுத்திரம் செல்லிப்பட்டு அய்யனாரப்பன் கோவில் அருகே சரவணன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக டிராக்டரில் வந்த பிரகாஷ், சரவணன் மீது ஏற்றுவதுபோல் வந்ததாக கூறப்படுகிறது. இதில் அதிர்ஷ்டவசமாக சரவணன் உயிர்தப்பினார்.

இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரகாஷ், செருப்பால் சரவணனின் கன்னத்தில் அடித்து கீழே தள்ளி சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்றார். இதுகுறித்து கண்டமங்கலம் போலீசில் சரவணன் புகார் செய்தார்.

சரமாரி அரிவாள் வெட்டு

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சரவணன் வில்லயனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். பெரியபாபுசமுத்திரம் பம்பையாற்று பாலம் அருகே சென்றபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் சரவணனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதில் ரத்தவெள்ளத்தில் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக அரியூாில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ம.க. பிரமுகர் பிரகாஷ், அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை மற்றும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்