திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம்
பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமைக் கழகம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சென்னை,
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி விமர்சனம் செய்தார். அவர் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திமுக பேச்சாளர் இவ்வாறு கவர்னரை வெளிப்படையாக மிரட்டும் வகையில் பேசியது குறித்து கவர்னர் ஆர்.என்.ரவியின் துணை செயலாளர் எஸ்.பிரன்னா ராமசாமி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார் அனுப்பியுள்ளார். அதில், திமுக பேச்சாளர் மேடையில் கவர்னரை அவதூறாகவும், மிரட்டும் வகையில் பேசியுள்ளார். கவர்னரை தரம் தாழ்ந்து அவதூறாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது இ.பி.கோ. 124 சட்டபிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமைக் கழகம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, திராவிட முன்னேற்றக் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.